இஸ்லாமியர்களுக்காக எப்போதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி குரல் கொடுக்கும் என திருமாவளவன் கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று எழும்பூர் பைஸ்மகாலில் நடைபெற்றது. நிகழச்சிக்கு இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில செயலாளர் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர்கள் முத்து முகமது, புருணை அக்பர், தொழில் அதிபர் முகமது சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மக்கா கலீல் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எம்.அப்துல் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு இப்தார் நோன்பு திறந்து வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-
இந்துக்களை ஒன்றிணைத்து இஸ்லாமியர்களுக்கு எதிராக பா.ஜ.க திட்டம் தீட்டி வருகிறது. இந்த சதிவலையில் இஸ்லாமியர்கள் விழுந்துவிடக் கூடாது. நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். எதிர்வினை ஆற்றக் கூடாது. உங்களுக்காக நாங்கள் என்றும் குரல் கொடுப்போம். ஜனநாயக சக்திகள் உங்களுக்கு ஆதரவாக துணைநிற்கும். இந்துத்துவா சக்திகள் இந்துக்களை தவறாக பயன்படுத்தி தூண்டி விடுகிறார்கள்.
அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்க பா.ஜ.க.வுக்கு எந்த தகுதியும் அருகதையும் இல்லை. அம்பேத்காரின் புத்தகங்களை படித்துப்பார்த்தால் இவர்கள் அம்பேத்காருக்கு மரியாதை செய்யமாட்டார்கள். பா.ஜ.க தலைவர் அண்ணாமலை 2 ஆயிரம் புத்தகம் படித்ததாக சொல்கிறார். அம்பேத்கார் புத்தகத்தை படித்திருந்தால் மாலை அணிவிக்க வந்திருக்கமாட்டார். இவர்களின் கொள்கைக்கு எதிரானவர் அம்பேத்கார்.
சமீபத்தில் கோயம்பேடு அம்பேத்கார்சிலை அருகே நடந்த வன்முறை சம்பவம் பா.ஜ.க.வின் திட்டமிட்ட சதி. பா.ஜ.க.வா? வி.சி.க.வா? என்று போட்டி இருப்பதாக கருத்து நிலவுகிறது. பா.ஜ.க.வை எந்த சூழ்நிலையிலும் எதிர்ப்பதற்கும் பதிலடி கொடுப்பதற்கும் விடுதலை சிறுத்தைகள் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.