ரஷியா கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது என்று அந்நாட்டு அதிபர் புதின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. உக்ரைன் ரஷியா நாடுகளுக்கு இடையேயான போர் 55-வது நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷிய படைகள் உக்ரைனின் மரியபோல் நகரை முற்றுகையிட்டு தொடர் தாக்குதலை நடத்தி வந்தன. மரியுபோல் நகரத்திற்குள் இருக்கும் உக்ரைன் வீரர்கள் தங்களுடைய ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு உடனடியாக சரணடைய வேண்டும் என ரஷியா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இந்நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரை ரஷிய படைகள் கைப்பற்றிவிட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
ரஷியா கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக ரஷிய அதிபர் புதின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மரியுபோல் நகரை கைப்பற்றியதற்காக ரஷிய ராணுவ வீரர்களுக்கு அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார். மரியுபோல் நகரில் உள்ள இரும்பு தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தாமல் கைப்பற்றுமாறு ராணுவத்தினருக்கு புதின் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடித்தக்கது.
இந்நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா நேற்று வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இது அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டதாகும். இது குறித்து பேசிய அதிபர் புதின், உண்மையான தனித்துவமான ஆயுதம் என்றும், இது ரஷிய ஆயுதப் படைகளின் போர் திறனை வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ரஷியாவின் பாதுகாப்பையும் நம்பகத்தன்மையும் புதிய ஏவுகணை உறுதி செய்துள்ளது என்றும், ரஷியாவை தாக்க நினைக்கும் எதிரிகள் இது குறித்து சிந்திக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.