புதுச்சேரியில் ஆளுநர் மூலமாக ஆட்சி மாற்றத்தை நிகழ்ந்த பாஜக காய்நகர்த்தி வருவதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள மண்ணாடிப்பட்டு பெரியபேட் பகுதியில் அம்பேத்கர் முழு உருவ வெங்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதனை திறந்து வைக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் நேற்று புதுச்சேரிக்கு வருகை தந்தார். தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:-
புதுச்சேரி மாநில ஆட்சி நிர்வாகத்தில் பாஜக தலையீடு உள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு முழுவதுமாக இயங்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. புதுச்சேரியில் விரைவில் ஆட்சி மாற்றத்தை ஆளுநர் மூலமாக நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது. தற்போதைய முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசை வெளிப்படையாக எதிர்க்காமல் அமைதி காப்பது அதிர்ச்சியாக உள்ளது. அவர் சுதந்திரமாக செயல்பட விடவில்லை.
தேசிய கல்வி கொள்கையில் 3, 5, 8,10 வகுப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களை வடிகட்ட வேண்டும் என்பதின் நோக்கமாகும். எஸ்.எஸ்டி, ஓபிசி மாணவர்கள் படிப்பை இடை நிறுத்தம் செய்ய வேண்டும் என வழிவகுத்துள்ளனர். செக்போஸ்ட் வைப்பதை போல, பள்ளிகளில் நுழைவுத்தேர்வு வைக்கின்றனர். 12-ம் வகுப்பு மதிப்பெண்களுக்கு மதிப்பில்லை என்பதை இந்த தேசிய கல்வி கொள்கை வழிவகுக்கிறது. இந்த தேர்வு முறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்றார்.
நீட் விலக்கு மசோதாவை பலமுறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதை தமிழக ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் வைத்துள்ளார். இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களில் ஆளுநர்கள் தேவையில்லை. அவர்கள் இல்லாமல் ஆட்சி நடத்த முடியும் என்பதற்கு மேற்வங்கத்தில் நடைபெறும் மம்தா பானர்ஜி ஆட்சி ஒரு எடுத்துக்காட்டு. பாஜகவின் சேவை கட்சியாக அதிமுக மாறியுள்ளது. திமுக அரசுக்கு எதிரான போக்கை கையாலுகின்றனர். அமித்ஷா வருகைக்கு எதிராக கருப்புகொடி ஆர்ப்பட்டம் அறிவித்திருப்பது வரவேக்கதக்கது. அறவழியில் அதனை நடத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.