உக்ரைனுக்கு மேலும் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், உலக நாடுகள் அதிக கனரக ஆயுதங்களை அனுப்புமாறு உக்ரைன் அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவ் வந்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சேஸ், டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் ஆகியோர் அதிபர் ஜெலன்ஸ்க்கியை சந்தித்து பேசினர். 3 பேரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது, உக்ரைனுக்கு 200 மெட்ரிக் டன் ஆயுதங்களை கப்பலில் அனுப்பி வைத்துள்ளதாக ஸ்பெயின் பிரதமர் தெரிவித்தார். டென்மார்க் பிரதமர், 686 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்தார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்க்கி பேசும் போது, மரியுபோல் நகரின் ஒருபகுதியில் இன்னும் தங்கள் படைகள் உள்ளது. உங்களுக்கு தெரிந்தபடி நிலைமை கடினமாகவும், மோசமாகவும் உள்ளது. அது மாறவில்லை என்று நம்புகிறேன். அரசு பணியாளர்கள், பொதுமக்கள், முக்கியமாக பெண்கள் உள்பட பல ஆயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து வெளியேறவிடாமல் ரஷ்ய படைகள் தடுத்து நிறுத்துகின்றனர். எங்கள் கணிப்புகளின்படி கிட்டத்தட்ட 1 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் மரியுபோலில் சிக்கிக்கொண்டுள்ளனர் என்று கூறினார்.
இதனிடையே உக்ரைனுக்கு மேலும் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க அதிபர் பைடன் அறிவித்துள்ளார். மரியுபோல் நகரை முழுவதுமாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறுவது கேள்விக்குறியாக உள்ளதாகவும் பைடன் தெரிவித்துள்ளார். மேலும் அடைக்கலம் தேடும் உக்ரேனியர்கள், ஐரோப்பிய நாடுகளில் இருந்து நேரடியாக அமெரிக்கா வரும் புதிய திட்டத்தை பைடன் அறிவித்தார்.
இந்நிலையில் உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு இதுவரை சுமார் 60 பில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் ரூ.4,57,169,13,00,000) இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. போர் மேலும் தொடருமானால் இழப்பு மதிப்பு அதிகரிக்கும். உக்ரைனுக்கு தேவையான நிதி உதவிகளை உலகவங்கி செய்யும். குறுகிய கால சேத மதிப்பீட்டின் கீழ் உதவிகள் வழங்கப்படும்’ என்றார்.