உக்ரேனியப் போருக்குப் பிறகான சூழல் பெரும் சவாலை உருவாக்கியுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற பொருளாதாரம் சம்பந்தப்பட்ட கூட்டத்தை முடித்துகொண்டு திரும்பிய அவரிடம் இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியா-அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவு முன்னேறியுள்ளது. இருதரப்பு உறவையும் யாரும் கேள்வி கேட்கவில்லை. இருநாட்டு உறவுகள் ஆழமடைந்துள்ளன. உக்ரேனியப் போருக்குப் பிறகான சூழல் பெரும் சவாலை உருவாக்கியுள்ளது. சூரியகாந்தி எண்ணெய் பெரும்பாலும் அந்நாட்டில் இருந்து தான் வருகிறது. இப்போது அது பாதிப்படைந்துள்ளது. விவசாய உறங்கள் ரஷியாவிடமிருந்து வருவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவுடனான உறவு என்பது பாதுகாப்பு உபகரணங்களுக்கான பாரம்பரிய சார்பு மட்டுமல்ல. ரஷியாவுடன் எங்களுக்கு ஒரு நேர்மறையான புரிதல் உள்ளது. இந்தியாவிற்கு அண்டை நாடுகளுடன் பல பிரச்சினைகள் உள்ளன. வடக்கு எல்லையில், கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் பதற்றம் நிலவுகிறது. மேற்கு எல்லையில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத பிரச்சனைகளை சந்திக்க இந்தியாவிலிருந்து கொடுக்கப்பட்ட உபகரணங்கள் எங்களை நோக்கியே திசை திருப்பபட்டன. இதனால் ரஷியாவுடன் இந்தியா ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவும் நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. இந்தியா நிச்சயமாக அமெரிக்காவுடன் நட்புறவை விரும்புகிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.