ரூ.100 கோடியில் மீன்பிடி துறைமுக பணிகள் விரைவில் முடிக்கப்படும்: அனிதா ராதாகிருஷ்ணன்

வேதாரண்யம் தொகுதியில் ரூ.100 கோடியில் மீன்பிடி துறைமுக பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி-பதில் நேரத்தின் போது ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. (அ.தி. மு.க.) பேசுகையில், ‘ 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளப்பள்ளத்தில் துறைமுகம் அமைக்கப்பட்டு வரும் நிலையில், ஆறு மாதமாக வேலை நடைபெறாமல் உள்ளது. உடனடியாக பணிகளை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

வேதாரண்யம் தொகுதி வானவன்மகாதேவி கிராமத்தில், 112 நாட்டுப்புறப் படகுகளை கொண்டு 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழில் மேற்கொண்டு வருகின்றனர். தினசரி 2000 முதல் 2500 கிலோ மீன்கள் பிடிக்கப்பட்டு அன்றைய தினமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளப்பள்ளத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. கடந்த ஆட்சி காலத்தில் முறையாக அனுமதி பெறாததால் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. கடந்த ஏப்ரல் 21-ந்தேதி மத்திய அரசின் அனுமதி மற்றும் கண்காணிப்பு குழுவின் அனுமதி பெறப்பட்டுள்ளதால் பணிகள் விரைவில் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.