ரஷ்ய படைகளால் முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நகரில் இரும்பு ஆலை ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ள பொதுமக்களை வெளியேற்றும் ஐ.நா.சபை மற்றும் செஞ்சுலுவை சங்கத்தின் முயற்சிக்கு ரஷ்ய அதிபர் புதின் கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் ஆண்டானியோ குட்டரஸ், நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மாஸ்கோவில் சந்தித்து பேசினார். அப்போது உக்ரைனில் மரியுபோல் நகரில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்ற உதவுமாறு குட்டரஸ் கேட்டுக் கொண்டார். இதற்கு கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ள புதின், உக்ரைன் நாட்டுக்கு எதிராக ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதிகள் போராடி வரும் டான்பாஸ் பிராந்திய பிரச்சனைகளில் முடிவு எட்டப்படாமல் பாதுகாப்பு உத்தரவாதத்தில் கையெழுத்திட முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
உக்ரைன் உடனான பேச்சுவார்த்தை சாதகமான பலனை தரும் என்று தாம் நம்புவதாகவும் புதின் தெரிவித்துள்ளார். மரியுபோல் நகரத்தில் இருந்து பொதுமக்களை மீட்க ஒத்துழைப்புத் தருவதாக புதின் உறுதி அளித்துள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை சர்வதேச செஞ்சுலுவை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ரஷ்யாவின் தாக்குதலில் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர், சிறுமிகளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவர்களுக்கு ஆப்பிள் ஐபாட்களை வழங்கிய ஜெலன்ஸ்கி விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக கூறினார்.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு பல்வேறு பண உதவி மற்றும் ஆயுத உதவியை அளித்து வருகின்றன. இந்நிலையில் அந்த நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அலுமினிய ஆலை அருகே உள்ள கிடங்கில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அவற்றை கடல் தாண்டி தாக்குல் காலிபர் ஏவுகணைகள் மூலம் அழித்ததாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு வழங்கப்பட்ட நவீன ஆயுதங்கள் அழிக்கப்பட்டது, அந்நாட்டிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துள்ளது.