புதுச்சேரி தலைமை செயலாளராக ராஜீவ் வர்மா பதவியேற்பு!

புதுச்சேரி தலைமைச் செயலாளராக இருந்த அஸ்வனி குமார் டெல்லிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் வர்மா இன்று பதவியேற்றுக்கொண்டார்.

புதுச்சேரி மாநில தலைமை செலாளராக கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் அஸ்வனி குமார் ஐ.ஏ.எஸ் பணியாற்றி வந்தார். மத்திய அரசு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது வழக்கம். ஆனால், புதுச்சேரியின் தலைமை செயலாளராக அஸ்வனி குமார் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆன நிலையிலும் அவர் தொடர்ந்து பணியாற்றி வந்தார். இதன் பின்னல், பாஜகவின் சதித் திட்டம் உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் குற்றமசாட்டி வந்தன. அதனை உறுதிப்படுத்தும் வகையில், புதுச்சேரி அரசின் திட்டங்களுக்கு தலைமை செயலாளர் அஸ்வனி குமார் அனுமதி வழங்காமல் தடையாக இருந்தார்.

இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தலைமை செயலாளரை மாற்றக்கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் என்.ரங்கசாமி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதன் பின்னர், கடந்த ஏப்ரல் 20-ம் தேதி அஸ்வனி குமார் டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அருணாச்சல பிரதேச மாநில ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் வர்மா புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை புதுச்சேரி வந்த ராஜீவ் வர்மாவிடம் அஸ்வனி குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற தனது பொறுப்புகளை ஒப்படைத்தார். அதன் பின்னர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தலைமைச் செயலக அதிகாரிகளுடன் ராஜீவ் வர்மா ஆலோசனை நடத்தினார்.