சென்னையில் இயங்கிக் கொண்டிருக்கும் நிசான் தொழிற்சாலை மூடப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
ஜப்பான் நாட்டின் நிசான் மோட்டார் நிறுவனத்தின் துணை நிறுவனமான நிசான் மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஒரகடத்தில் டாட்சன் வகை கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்தநிலையில், மந்தமான கார் விற்பனை காரணமாக, தற்போது அதன் உற்பத்தியை நிறுத்தப்போவதாகவும், இருப்பில் உள்ள வாகனங்களை மட்டும் விற்பனை செய்யப் போவதாகவும், ஏற்கெனவே உள்ள வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் தொடர்ந்து கிடைக்கவும், விற்பனைக்கு பிந்தைய சேவைகள் அளிக்கப்படும் என்றும், நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்டஉத்தரவாதம், பூர்த்தி செய்யப்படும் என்றும் அந்தநிறுவனம் அறிவித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
மேற்படி நிறுவனம் மூடப்படும் பட்சத்தில், நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் அரசுக்கு வரும் வருவாயும் வெகுவாக குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. டாட்சன் வாகனத்திற்கான உதிரி பாகங்கள் விற்பனை மூலம் வரும் வருமானம் மட்டுமே அரசுக்கு கிடைக்கக் கூடிய சூழ்நிலை உருவாகும்.
கடந்த ஓராண்டில் இரண்டு பெரிய கார் தயாரிக்கும் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன என்பது வேதனையான ஒன்று என்பதோடு மட்டு மல்லாமல் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும். இவ்வாறு நிறுவனங்கள் மூடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு. இதைத் தான் இந்த நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டும் என்ற அடிப்படையில், இந்தப்பிரச்சினையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு, நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, நிசான் மோட்டார் நிறுவனம் தொடர்ந்து சென்னையில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.