கல்வி நிறுவனங்களில் சாதி, மத அடையாளங்களுக்கு தடை: மருத்துவர் கிருஷ்ணசாமி

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் சாதி, மதங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாதியை அடையாளப்படுத்தும் விதமாக நெற்றியில் பொட்டு இட்டுக் கொள்வது, கைகளில் கயிறு கட்டுவது போன்ற செயல்களால் மாணவர்களிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுவதும், அதனால் பல மாணவர்கள் உயிர் இழப்புக்கு ஆளான சம்பவங்களையும்; பலத்த காயங்களுடன் சிகிச்சை பெறவேண்டிய நிலைகள் குறித்தும் 2011 முதல் 2016 வரையிலும் சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டியது மட்டுமின்றி, அப்பொழுதே பள்ளிக்கல்வித்துறை மற்றும் கல்லூரி இயக்குநரகத்திலும் வலியுறுத்தியுள்ளோம். எனினும் கடந்த 10 ஆண்டுகளாக மாநில அரசின் பள்ளி மற்றும் உயர் கல்வித்துறை எவ்விதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

கர்நாடகத்தில் ஒரு குறிப்பிட்ட மதப் பிரிவைச் சேர்ந்த பெண்கள் முக அங்கி அணிவது குறித்த சர்ச்சை எழுந்தபோதும் மாணவர்களிடத்தில் எவ்விதமான பேதங்களையும் உருவாக்கக்கூடிய அடையாளங்களை அனுமதிக்கக் கூடாது என்பதை எடுத்துச் சொல்லி சீருடை குறித்து வலியுறுத்தி இருந்தோம். ஆனால், அரசு நிர்வாகம் அதைக் காதில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. இதன் விளைவாக இன்றைய தினம் ஒரு பள்ளி மாணவன் உயிர் இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், பாப்பாகுடி ஒன்றியத்தில் முக்கூடல் என்ற பகுதிக்கு அருகாமையில் உள்ள பள்ளக்கால் புதுக்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும், அருகாமையில் உள்ள அடைக்காணி கிராமத்தைச் சார்ந்தவர்களுக்கும் அப்பகுதியில் உள்ள பள்ளியிலேயே மோதல் ஏற்பட்டு தலையில் பலத்த காயம்பட்ட செல்வ சூர்யா என்ற மாணவன் உயிரிழந்து விட்டதாகச் செய்திகள் வருகின்றன. அம்மாணவனை இழந்த பெற்றோர்களுடைய உள்ளம் எப்படித் துடிதுடித்துப் போயிருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அம்மாணவனை இழந்து வாடும் பெற்றோருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு குண்டூசி முனையளவு பிரச்சனையைக் கூட பூதாகரப்படுத்தி அறிக்கை கொடுக்கக் கூடியவர்கள், ஆட்சியிலே அமர்ந்துகொண்டு காவல்நிலைய மரணமாக இருந்தாலும், கோவில் விழா நிகழ்ச்சிகளாக இருந்தாலும், தேரோட்ட நிகழ்ச்சி என்றாலும் விலைமதிப்பற்ற உயிர்களுக்கு 5 லட்சமோ, 10 லட்சமோ அரசு பணத்தில் நிவாரணம் அறிவித்துவிட்டு, இந்த சம்பவங்களை எல்லாம் கண்டும் காணாததுபோல் கடந்து செல்ல முயற்சிக்கிறார்கள்.

அண்மை காலமாக, திருப்பத்தூர் அரசுப் பள்ளியில் ஆசிரியரை மாணவர்கள் மிரட்டுவது, தாக்குவது; சென்னை, கோவை, தேனி, திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மாணவர்களுக்கு உள்ளேயே தாக்கிக் கொள்வது; சென்னையில் மாணவிகளுக்குள்ளேயே பொதுவெளியில் சண்டை போன்ற செய்திகள் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. அச்சம்பவங்கள் அனைத்தும் தடுக்கப்பட வேண்டும். சாதி மற்றும் எவ்வித மதங்களையும் சார்ந்திருக்காமல் கல்வி நிறுவனங்கள் கல்வி கற்பதற்கு மட்டுமே என்பதை உணர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சாதிய, மதத்தை அடையாளப்படுத்தும் மத அடையாளங்கள் முற்றாகத் தடை செய்திட மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.