40 ரஷ்ய விமானங்களை வீழ்த்திய உக்ரைன் வீரர் மரணம்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை 2 மாதமாகியும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் 40 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி ‛கீவ் நகரின் பேய்’ என புகழப்பட்டதோடு, உக்ரைன் வீரர்களுக்கு ஊக்கமாக இருந்த விமானி போரில் வீரமரணமடைந்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா இடையே இருந்த மோதல் போக்கு பிப்ரவரி 24ம் தேதி போராக உருமாறியது. உக்ரைன் மீது ரஷ்யா வான்வெளி, தரைவழி தாக்குதலை தொடங்கியது. இந்த போர் துவங்கி 2 மாதங்களுக்கு பிறகும் தொடர்ந்து வருகிறது. உக்ரைனை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா படைகள் முன்னேறும் நிலையில் ரஷ்யாவுக்கு உக்ரைன் வீரர்களும் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். இதனால் இருநாட்டு வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. வெடிகுண்டு, ஏவுகணை தாக்குதல் காரணமாக உக்ரைனின் பல நகரங்கள் சீர்குலைந்துள்ளன. அங்குள்ள வீரர்கள், அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக பலியாகி வருகின்றன. இவர்களின் உடல்கள் மொத்தமாக புதைக்கப்பட்டு வருகின்றன. இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து உக்ரைனை விட்டு வெளியேறி வருகின்றனர். இருப்பினும் மனம் தளராத உக்ரைன் தொடர்ந்து போராடி வருகிறது. இதனால் தான் ரஷ்யாவின் இலக்கான உக்ரைன் தலைநகர் கீவ்வை இன்று வரை ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை.

ரஷ்யாவை உக்ரைன் படையினர் பொதுமக்களோடு சேர்ந்து எதிர்த்து வருகின்றனர். அவர்கள் ரஷ்யாவின் விமானங்களையும், கப்பல்களையும் வீழ்த்தி வருகின்றனர். மேலும் டாங்கி வண்டிகளையும் சிதைத்து வருகின்றனர். இதனால் எளிதாக உக்ரைனை கைப்பற்றி விடலாம் என்ற ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினின் இலக்கு இன்னும் ஈடேறவில்லை. அதேநேரத்தில் உக்ரைனை விட பல மடங்கு படைபலம் கொண்ட ரஷ்யாவை அந்நாடு 2 மாதம் சமாளித்தை பல உலக நாடுகள் பாராட்டி வருகின்றன.

இந்நிலையில் தான் போரின்போது 40 ரஷ்ய விமானங்களை தனி ஆளாக சுட்டு வீழ்த்தி புகழ்பெற்ற விமானி மேஜர் ஸ்டீபன் தரபால்கா (வயது 30) இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் தான் போர் துவங்கிது முதல் ரஷ்யா படைகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். இவர் மிக் 29 ரக விமானத்தில் பறந்து ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வந்தார். போரின் முதல் நாளில் மட்டும் 10 ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்தி உலகளவில் புகழ் பெற்றார். அவரது பெயர் விபரங்களை உக்ரைன் அரசு வெளியிடவில்லை. மாறாக கீவ் (உக்ரைன் தலைநகர்) நகரின் பேய்(Ghost Of Kyiv) என அழைக்க தொடங்கினர். தற்போது வரை அவர் 40 ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இவரது இத்தகைய செயல்பாடு உக்ரைன் வீரர்களை உற்சாகப்படுத்தியது. மனம் தளராமல் ரஷ்ய படைகளை எதிர்த்து போரிட தூண்டியது.

இந்நிலையில் மார்ச் 13ல் நடந்த தாக்குதலில் இவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பான விபரம் தற்போது தான் தாமதமாக வெளியாகி உள்ளதாகவும் பிரிட்டன் செய்தி நிறுவனமான ‛டைம்ஸ் ஆப் லண்டன்’ கூறியுள்ளது. மேலும் இதுபற்றி அவரது பெற்றோருக்கும் இன்னும் தகவல் அளிக்கப்படவில்லை என செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மார்ச் 13ல் கீவ் நகரை கைப்பற்றும் நோக்கில 100க்கும் அதிகமான ரஷ்ய போர் விமானங்கள் வானில் பறந்தன. ரஷ்யாவின் பெரிய ராணுவத்துக்கும் ஈடுகொடுக்க முடியாமல் திணறிய உக்ரைன் படைகள் சரணடைய முடிவு செய்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டீன் தரபால்கே ரஷ்ய போர் விமானங்களை எதிர்ப்பதாக கூறினார். திறமையான வீரரை இழக்க விரும்பாத உக்ரைன் அரசு முதலில் மறுத்தது. அதன்பிறகு அவரது முடிவுக்கு உடன்பட்டது. இதையடுத்து தனியாக புறப்பட்ட அவர் ‘மிக் – 29′ போர் விமானத்தில் பறந்து ரஷ்யா விமானங்களை ஒன்றன் பின் ஒன்றாக சுட்டு வீழ்த்தினார். இதனால் ஆக்ரோஷமடைந்த ரஷ்ய படையினர் அவரது போர் விமானத்தை சுற்றிவளைத்து சுட்டு வீழ்த்தின. இதில் ஸ்டீபன் தரபால்கே மரணமடைந்தார்.

போர் களத்தில் சிங்கமாய் செயல்பட்டு ரஷ்ய படைகளை துவம்சம் செய்த இவரது பணியை பாராட்டி உக்ரைன் சார்பில் சிறப்பு பதக்கமான ‛ஆர்டர் ஆப் தி கோல்டன் ஸ்டார்’ வழங்கப்பட உள்ளது. மேலும் உக்ரைனின் ஹீரோ என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த போர் நடவடிக்கையின்போது அவர் அணிந்திருந்த ஹெல்மெட் மற்றும் கண்ணாடிகள் இப்போது லண்டனில் ஏலம் விடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேஜர் ஸ்டீபன் தாராபால்கா மேற்கு உக்ரைனில் உள்ள கொரோலிவ்காவ் கிராமத்தில் மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்தார். இவர்களின் பெற்றோர் தொழிலாளியாக இருந்தனர். சிறுவயது முதலே விமானம் இயக்குவதை ஆர்வமாக கொண்டு படித்து வந்தார். உக்ரைன் விமானப்படையில் விமானியாக பணியில் சேர்ந்தது முதல் அவரது கனவு நனவானது. இவருக்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே உக்ரைன் நாட்டில் அடைந்த தோல்விக்குப் பழிதீர்க்கும் வகையில், சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற வார்த்தையைக் கைவிட்டு, உக்ரைன் மீது முழு வீச்சிலான போரை ரஷ்ய அதிபர் புதின் அறிவிக்கக் கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. போர் அறிவிப்பு வரும் மே 9ஆம் தேதி நடைபெறும் வருடாந்திர வெற்றி தின அணிவகுப்பின் போது இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ரஷ்யா ராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் அதிபர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர். அப்படிச் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற வார்த்தையை விடுத்துவிட்டு முழு வீச்சிலான போரை அறிவித்தால், அது உக்ரைன் நிலைமையை மாற்றக்கூடும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

முழு வீச்சிலான போரை அறிவிக்கும் போது, ரஷ்ய அரசால் நாட்டில் ராணுவச் சட்டத்தை அமல்படுத்த முடியும். அதேபோல கூட்டணி நாடுகளின் உதவியைக் கோர முடியும். ரஷ்ய மக்களின் போராட்டத்தை ஒடுக்க முடியும். டான்பாஸ் பகுதியில் ரஷ்யப் படைகள் இதுவரை மிகக் குறைந்த அளவே முன்னேறி உள்ளதாக நம்பப்படுகிறது. இப்படி போரில் ரஷ்யாவால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் போனதே ரஷ்யா ராணுவத்திற்கு அனைத்து பிரிவுகளையும் ஒன்றிணைத்துத் தாக்குதலைத் தீவிரப்படுத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளியுள்ளதாகவும் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் பெரியளவில் முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ரஷ்யப் படைகள் தொடர்ந்து உக்ரைன் அப்பாவி மக்களைக் கொன்று வருவதால் இந்த அமைதி பேச்சுவார்த்தை விரைவில் முடிய வாய்ப்பு இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் நாட்டில் இருக்கும் பயிர்களையும் ரஷ்யா எடுத்துச் செல்வதாக ஜெலன்ஸ்சி சாடியுள்ளார். விவசாயம் உலக அளவில் தானியங்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக உக்ரைன் உள்ளது. ரஷ்யா போர் காரணமாக அதன் தானிய ஏற்றுமதி வெகுவாக குறைந்தது. இதன் காரணமாகச் சர்வதேச அளவில் தானிய விலைகளும் கிடுகிடுவென ஏறியது. இந்த தானிய பற்றாக்குறை மேலும் தொடர்ந்தால் அது பல நாடுகளில் தானி பற்றாக்குறையை ஏற்படுத்தும் ஆபத்தும் கூட உள்ளது.