நவாஸ் ஷெரீப்பின் மகளான மரியம் நவாஸ் குறித்து இம்ரான்கானின் சர்ச்சை பேச்சு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானது.
பாகிஸ்தானில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ஆட்சியை இழந்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான் நாடு முழுவதும் தொடர் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த கூட்டங்களில் பேசும் இம்ரான்கான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான புதிய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய இம்ரான்கான், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளான மரியம் நவாஸ் குறித்து தரக்குறைவாக பேசினார். மரியம் நவாஸ் அடிக்கடி தனது பெயரை குறிப்பிட்டு விமர்சனம் செய்வது குறித்து பேசிய இம்ரான்கான் “மரியம் தயவுசெய்து கவனமாக இருங்கள். நீங்கள் தொடர்ந்து எனது பெயரை உச்சரித்துக்கொண்டே இருப்பதால். உங்கள் கணவர் வருத்தப்படலாம்” என கூறினார்.
இம்ரான்கானின் இந்த சர்ச்சை பேச்சு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. பாகிஸ்தான் பிரதமரும், நவாஸ் ஷெரீப்பின் தம்பியுமான ஷபாஸ் ஷெரீப், “இம்ரான்கான் நாட்டுக்கு எதிராக செய்த குற்றங்களை இதுபோன்ற இழிவான மற்றும் மோசமான நகைச்சுவைகளால் மறைத்துவிட முடியாது” என சாடினார்.