பிளாட்பாரம் மீது மோதி விபத்து: ரெயில் என்ஜின் டிரைவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கடற்கரை நிலைய பிளாட்பாரம் மீது மோதி விபத்தில் ரெயில் என்ஜின் டிரைவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திற்கு பணிமனையில் இருந்து காலி பெட்டிகளுடன் மின்சார ரெயில் மாலை கொண்டு வரப்பட்டது. அப்போது என்ஜின் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரெயில் பிளாட்பாரத்தின் மீது ஏறியது. இந்த விபத்தில் ரெயில் என்ஜின் பெட்டி உள்பட 2 பெட்டிகளும், பிளாட்பாரத்தில் இருந்த 2 கடைகளும் சேதமடைந்தன. பயணிகள் இல்லாததால் உயிர் சேதமின்றி பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும், உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

இந்த விபத்தில் 1-வது பிளாட்பாரம் சேதமடைந்தது. அங்கிருந்து மின்சார ரெயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. விபத்துக்குள்ளான ரெயில் என்ஜின் மற்றும் ஒரு பெட்டி தவிர பிற பெட்டிகள் துண்டிக்கப்பட்டு எடுத்து செல்லப்பட்டன. அந்த பிளாட்பாரத்தில் ரெயில் சேவை நடைபெறவில்லை. ஆனாலும் பிற பிளாட்பாரங்களில் இருந்து மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன.

இதற்கிடையில் சேதமடைந்த பிளாட்பாரத்தை சரி செய்யும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர். விடிய விடிய இந்த பணி நடந்தது. மீட்பு குழுவினர் அதிகாலை 3 மணி வரை முழு வீச்சில் ஈடுபட்டு பெரும்பாலான பணிகளை முடித்தார்கள்.

இதற்கிடையில் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த சென்னை கோட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர், கடற்கரை ரெயில் நிலையத்தில் இரவு முழுவதும் மீட்பு பணிகள் நடைபெற்று வழித்தடம் சரி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலையில் 1-வது பிளாட்பாரத்தில் இருந்து மின்சார ரெயில் சேவை தொடங்கியது. இந்த சம்பவத்தால் எந்த ஒரு மின்சார ரெயில் சேவையும் ரத்து செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மின்சார ரெயிலை இயக்கிய டிரைவர் மீது எழும்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடற்கரை நிலைய மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 151, 154 மற்றும் 279 ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரெயில்வே சொத்தை சேதப்படுத்துதல் மற்றும் கவனக்குறைவாக செயல்படுதல் போன்ற பிரிவின் கீழ் பவித்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் கடற்கரை ரெயில் நிலைய விபத்து குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படுகிறது. இந்த விபத்து ரெயில் என்ஜின் டிரைவர் கவனக்குறைவால் நடந்ததா? என்ஜினில் பிரேக் செயல் இழந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்படுகிறது.

ரெயிலை இயக்கிய டிரைவர் பவித்திரன் லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும். என்ஜின் டிரைவர் கவனக்குறைவால் விபத்து நடந்து இருந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.