வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இதுவரை 17 லட்சம் விண்ணப்பங்கள்!

தமிழகத்தில் இதுவரை வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள 17 லட்சம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நவம்பர் 12, 13, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள்) 4 சிறப்பு முகாம்களை நடத்த இந்திய தேர்தல் கமிஷன் ஆணையிட்டது. நடந்து முடிந்துள்ள 4 சிறப்பு முகாம்களையும் சேர்த்து, இதுவரை வந்துள்ள விண்ணப்பங்கள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 28-ந் தேதிவரை 17 லட்சத்து 2 ஆயிரத்து 689 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பதற்காக மட்டும் 7 லட்சத்து 57 ஆயிரத்து 341 விண்ணப்பங்கள் வந்துள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 591 விண்ணப்பங்கள்; சென்னையில் 66 ஆயிரத்து 467; காஞ்சீபுரத்தில் 34 ஆயிரத்து 209; செங்கல்பட்டு மாவட்டத்தில் 69 ஆயிரத்து 553 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 12 ஆயிரத்து 452 விண்ணப்பங்களும், அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்திலும் விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.