ஒழுக்கம், அர்ப்பணிப்பு, பயபக்தி ஆகியவையே வாழ்க்கையை மேம்படுத்தும்: வெங்கையா நாயுடு!

ஒழுக்கம், அர்ப்பணிப்பு, பயபக்தியே வாழ்க்கையை மேம்படுத்தும் என, மதுரை தியாகராசர் கல்லூரியின் பவளவிழாவில் பங்கேற்ற முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவுறுத்தினார்.

மதுரை தெப்பக்குளம் பகுதியிலுள்ள தியாகராசர் கல்லூரியின் 75-வது ஆண்டையொட்டி பவள விழா நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் இன்று நடந்தது. கல்லூரிச் செயலாளர் ஹரி. தியாகராசன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்று பேசியதாவது:-

‘பொதுவாக கல்வி நிலையங்களில் கல்வி மட்டுமின்றி கூடுதல் திறன் கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்க வேண்டும். இதுவே, அவர்களின் வாழ்வியலுக்கு உதவும். வளர்ச்சிக்கும் பயன்படும். தற்போது, எங்கு சென்றாலும், இதை பற்றியே நான் வலியுறுத்துகிறேன். இன்றைய இளைஞர்கள்தான் நாளையத் தலைவர்கள். அவர்களை சிறந்தவர்களாக உருவாக்கவேண்டும்.

பெரும்பாலான கல்லூரிகளில் இளைஞர்களுக்கான மேம்பாடு பயிற்சி இல்லை. இதற்காகவே புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதை புரிந்துகொண்டு பின்பற்ற வேண்டும். ஒழுக்கம், அர்ப்பணிப்பு, பயபக்தியே வாழ்க்கையை மேம்படுத்தும். இதற்கான மாற்றமும் தேவை. இயற்கையை பாதுகாக்க வேண்டும். இது பற்றி மாணவர்களுக்கு சொல்லித் தரவேண்டும். இந்திய உணவு பழக்கத்தை தவிர்த்து, பிற துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே மனது திடமாக இருக்கும். நமது வீட்டு சமையல் அறையில் சமைத்த உணவுகள்தான் சிறந்தவை; ஊட்டச்சத்து மிக்கவை. அவற்றையே உண்ணவேண்டும்.

உடல் வலிமைக்கு யோகா, நடைப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்கள் பயனுள்ளதாக இருந்தாலும், தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்த வேண்டும். இந்தியாவில் கூட்டுக் குடும்ப உறவுமுறை குறைந்ததால் சமூக வலைத்தள பயன்பாடு அதிகரித்துள்ளது. உலகமே இந்தியாவை உற்று நோக்குகிறது. 3-வது பொருளாதார மிக்க நாடாக இந்தியா உருவெடுக்கும். குறிப்பாக விண்வெளி தொடர்பான கண்டுபிடிப்புகளும் அதிகரிக்கவேண்டும். எதுவானாலும், தொழில் நுட்பங்கள் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவேண்டும். இயற்கையை முறையாக பராமரித்தால் மட்டுமே நாட்டின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.

நீர்நிலைகளை பாதுகாப்பதும் அவசியம். நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்படாததால் கேரளா, கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களின் பல பகுதிகளில் தண்ணீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தியாகராசர் கல்வி நிறுவனங்களை 3வது தலைமுறை சிறப்பாக வழி நடத்துகிறது. தொழில் இன்றி சேவை அடிப்படையில் இக்கல்வி குழுமம் செயல்படுகிறது. தரம் உயர்வுக்கான ‘நாக்’ கமிட்டியின் ஆய்வில் 44வது இடத்தில் இருந்து 18-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இதற்கு கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்களும் காரணம். இக்கல்வி குழுமம் கல்வி சேவையை தொடர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.