கோடி கோடியாக ஊதியம் பெறும் நடிகர்கள், தெருக் கோடியில் இருக்கும் தங்கள் ரசிகர்களைக் காப்பாற்றியாக வேண்டும். அறியாமையில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்று சுப.வீரபாண்டியன் வேதனையுடன் கூறியுள்ளார்.
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் வேதனையுடன் ஒரு பதிவு பதிவிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-
எல்லா துறைகளையும் போலத் திரை உலகிலும் போட்டியாளர்கள் இருப்பார்கள், இருக்கிறார்கள்! தமிழ்த் திரை உலகில் அப்படிக் காலந்தோறும் இரு பெரும் நடிகர்கள் போட்டியாளர்களாக இருந்து வருவதை நாம் பார்க்கிறோம். தொடக்கத்தில், எம்.கே.டி. பாகவதர், பி.யூ. சின்னப்பா! பிறகு, எம்ஜிஆர், சிவாஜி கணேசன்! அடுத்து, ரஜினிகாந்த், கமல்! இப்போது விஜய், அஜித்! இவர்களைத் தாண்டி இன்னும் பல புகழ்பெற்ற நடிகர், நடிகைகள் தமிழ் திரைஉலகில் இருந்துள்ளனர் இப்போதும் இருக்கின்றனர்! மற்ற துறைகளில் எல்லாம், அது தொழில் போட்டியாக, புகழ்போட்டியாக அவரவர்க்கு இடையில் மட்டுமே நிகழும். ஆனால் திரை உலகில் மட்டும், அவர்களைத் தாண்டி, அவர்களின் ரசிகர்களுக்கு இடையிலான போட்டியாகத் தொடர்ந்து மோதலாகவும் சில வேளைகளில் உருவெடுக்கும்! நடிகர்களுக்கு இடையிலான அந்தப் போட்டியும், மோதலும் அண்மையில் வாரிசு, துணிவு என்னும் இரு படங்கள் வெளியிடப்பட்ட நாளில் உச்சத்திற்கு வந்திருப்பதோடு, நாகரிகத்தின் எல்லைக் கோடுகளையும் தாண்டி இருக்கிறது!
தடைகளை மீறுவது, பொதுமக்களுக்குத் தொல்லை தருவது, ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்வது – எல்லாவற்றுக்கும் உச்சமாக ஓர் இளைஞர் உயிரையே பலி கொடுத்திருப்பது என்று அந்த நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. அவ்வாறு மோதிக்கொண்ட நடிகர்கள் இருவரின் ரசிகர்களும், உழைப்பாளிகளாக அல்லது உழைக்கும் மக்களின் பிள்ளைகளாகத்தான் இருக்கக்கூடும். அன்றாடம் உழைத்தால்தான் வாழ்க்கை என்னும் நிலையில் இருக்கும் பல குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள், இப்படி நிழலுக்காக மோதி, நிஜத்தை இழந்து கொண்டிருப்பது எவ்வளவு வேதனை!
புதுக்கோட்டைக்கு அருகில் ஒரு கிராமத்தில் நடந்திருக்கும் காட்டுமிராண்டித்தனமான செயலைக் கண்டித்து இளைஞர்கள் குமுறி அழவில்லை. சாதி வெறியால் நடைபெறும் ஆணவக் கொலைகளை அறுத்தெறியப் புறப்படவில்லை. இந்தித் திணிப்பை எதிர்த்து கிளர்ந்து எழவில்லை. சமூக அநீதிகளை, பெண் அடிமைத்தனத்தைப் பொறுக்க முடியாமல் போராடத் தெருவுக்கு வரவில்லை. வெறுமனே இரண்டு நடிகர்களின் திரைப்படங்களில் எது சிறந்த படம் என்பதை மக்கள் தீர்மானிப்பதற்கு முன், இவர்கள் தீர்மானிப்பதற்காக போட்டி போட்டுத் தெருவில் சண்டையில் இறங்கி இருக்கிறார்கள்! இந்த நிலையை மாற்றியே தீர வேண்டும் என்பதில் அனைவரும் பொறுப்பேற்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. குறிப்பாக, அந்த இரண்டு நடிகர்களும் இது குறித்துச் சிந்திக்க வேண்டும். கவலைப்பட வேண்டும்! கோடி கோடியாக ஊதியம் பெறும் நடிகர்கள், தெருக் கோடியில் இருக்கும் தங்கள் ரசிகர்களைக் காப்பாற்றியாக வேண்டும். அறியாமையில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும்! தங்கள் ரசிகர்களைச் சமாதானப்படுத்தி, அவர்களை நன்னெறிப்படுத்த வேண்டும். இனிமேலாவது ஒரே நாளில் இருவரின் படங்களும் வெளியாவதை அவர்களே தவிர்க்க வேண்டும்! இரண்டு பேர் புகழ் பெறுவதற்காக, ஏராளமான இளைஞர்களின் வாழ்க்கை பலியாகக் கூடாது.
இளைஞர்களை இப்படிப்பட்ட கலவரங்களில் இழந்து விடும் நாடு, எதிர்காலத்தில் தன்னையே இழந்து விடக் கூடிய அபாயம் இருப்பதை அனைவரும் உணர வேண்டும்! பொழுதுபோக்கு என்பது வாழ்வின் ஒரு பகுதி! வாழ்க்கை என்பது பொழுதுபோக்கின் ஒரு பகுதியாக ஆகிவிடக்கூடாது! இளைஞர்களே! எதிர்காலத்தில் உங்களுக்கான எத்தனையோ களங்கள். சின்னச் சின்னக் குளங்களில் விழுந்து மறைந்து விடாதீர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.