தமிழ்நாட்டில் எட்டு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மற்றும் கீழடி புனை மெய்யாக்க செயலியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (6.4.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் எட்டு இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அகழாய்வுப் பணிகளின் தொடக்கமாக சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நமண்டி ஆகிய இரண்டு அகழாய்வுப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். மேலும், சிவகங்கை மாவட்டம், கொந்தகை கிராமத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகத்திற்கு வடிவமைக்கப்பட்டுள்ள கீழடி புனை மெய்யாக்க செயலியை (Keeladi Augmented Reality App) தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு 15 இலட்சம் ஆண்டுகள் மனிதகுல வரலாற்றுத் தொன்மை கொண்ட நிலப்பரப்பாகும். இதன் தொன்மையைக் கண்டறிய முறையான அகழாய்வுகள் அவசியமாகும். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளின் அறிவியல் அடிப்படையிலான பகுப்பாய்வு முடிவுகள் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றில் புதிய வெளிச்சம் ஏற்பட்டுள்ளது. கீழடி அகழாய்வு, தொல்லியலாளர்கள் இடையே மட்டுமின்றி உலகத் தமிழர்கள் இடையேயும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்ச் சமூகமானது, கி.மு. ஆறாம் நூற்றாண்டில் படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை ஒரு கரிமப் பகுப்பாய்வு அல்லாமல், மூன்று பகுப்பாய்வுகள் முடிவுகள் வாயிலாக உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது. பொருநை ஆற்றங்கரை நாகரிகம், 3200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதை சிவகளை அகழாய்வில் கிடைக்கப்பெற்ற நெல் உமியினை பகுப்பாய்வு செய்ததன் வாயிலாக உறுதி செய்ய முடிகிறது என்று 8.9.2021 அன்று சட்டப்பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார். அதேபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறை அகழாய்வில் பெறப்பட்ட இரண்டு AMS காலக் கணிப்புகள் முடிவுகள் வாயிலாக தமிழ்நாட்டில் இரும்பு 4200 ஆண்டுகளுக்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்டது என்று சட்டமன்றத்தில் கடந்த 9.5.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்.
அண்மைக்கால தொல்லியல் சாதனைகள் மூலம் நமது புகழ்பெற்ற, நீண்ட வரலாற்றில் காணும் பண்பாடு மற்றும் கால வரிசை இடைவெளிகளை நிரப்புவதற்கு நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்காக தமழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல், வரலாற்றுக் காலம் வரையிலான தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு, தொழில்நுட்பம் மற்றும் விழுமியங்களுக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் தற்போது 2023-ஆம் ஆண்டில் கீழ்க்காணும் எட்டு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஒரே ஆண்டில் எட்டு இடங்களில் அகழாய்வு செய்வது, தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது சிறப்பாகும்.
கீழடி மற்றும் அதன் சுற்றியுள்ள தொல்லியல் தளங்கள் (அகரம், கொந்தகை), சிவகங்கை மாவட்டம் – ஒன்பதாம் கட்டம்
கங்கைகொண்ட சோழபுரம், அரியலூர் மாவட்டம்- மூன்றாம் கட்டம்
வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் – இரண்டாம் கட்டம்
துலுக்கர்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் – இரண்டாம் கட்டம்
கீழ்நமண்டி திருவண்ணாமலை மாவட்டம் – முதல் கட்டம்
பொற்பனைக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் – முதல் கட்டம்
பூதிநத்தம், தருமபுரி மாவட்டம் – முதல் கட்டம்
பட்டறைப்பெரும்புதூர், திருவள்ளூர் மாவட்டம் – மூன்றாம் கட்டம்
கடந்த ஆண்டு அறிவித்தவாறு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை இணைந்து தண்பொருநை (தாமிரபரணி) ஆற்றின் முகத்துவாரத்திற்கு எதிரில் சங்க காலக் கொற்கைத் துறைமுகத்தின் தொல்லியல் வளத்தினைக் கண்டறிவதற்கு முன்கள புல ஆய்வு செய்து வருகின்றன. இந்த ஆய்வில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில், கடல் அகழாய்வு செய்ய திட்டமிடப்படும். எட்டு இடங்களில் அகழாய்வுகள், களஆய்வுகள் மற்றும் சங்க காலக் கொற்கைத் துறைமுகத்தினை அடையாளங் காண முன்களப் புல ஆய்வுப் பணிகள், வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 5 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படவுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.