தமிழகத்தின் உள்துறைச் செயலாளராக இருந்த பணீந்திர ரெட்டி போக்குவரத்துத் துறைக்கு மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் முதல்முறையாக பெண் ஒருவர் இத்தகைய முக்கிய பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என கடந்த சில தினங்களாக பேச்சு அடிப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழக அமைச்சரவை மாற்றப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளார்கள். தமிழகம் முழுவதும் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் முதல்வரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன் தற்போது நிதித் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். அது போல் நிதித் துறை செயலாளராக இருந்த முருகானந்தம் முதல்வரின் முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். அது போல் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மை செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறை செயலாளராக இருந்த பணீந்திர ரெட்டி போக்குவரத்து துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அது போல் போக்குவரத்து துறை செயலாளராக இருந்த கோபால் லஞ்ச ஒழிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ககன்தீப் சிங் பேடி சுகாதாரத்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அது போல் சுகாதராத் துறை செயலாளராக இருந்த செந்தில் குமார் ஐஏஎஸ், அமுதா வகித்து வந்த ஊரகத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்படி பல்வேறு அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் அமுதா ஐஏஎஸ்ஸுக்கு முக்கிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது. உள்துறை என்பது தமிழ்நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவைகளை உள்ளடக்கியது. அது போல் மாநில நிர்வாகம், ராஜதந்திரம், புலனாய்வு, சட்டம், ஒழுங்குமுறை, நிதி முகமைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்தது ஆகும். இத்தகைய பெரிய பதவிக்கு அமுதாவை நியமித்தது சமூகநீதி, சமத்துவம், திராவிட மாடலின் உச்சமாகும். தமிழ்நாட்டில் மதுரையைச் சேர்ந்த அமுதா ஐஏஎஸ் 1994 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இவர் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்தார். இந்த பதவிக்கு முன்னர், அமுதா, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் துறையில் இயக்குநராகவும் உறுப்பினர்-செயலாளராகவும் பணியாற்றினார். அது போல் அமுதா தமிழ்நாடு அரசின் மகளிர் மேம்பாட்டுக்கான தமிழ்நாடு கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். மேலும் குடிநீர் மற்றும் சுகாதாரத்திற்கான ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் திட்ட அதிகாரியாக பணியாற்றியுள்ளபோது குடிநீரில் ஏதேனும் சுகாதாரமின்மை இருந்தால் அமுதா அதிரடியாக நடவடிக்கை எடுக்கத் தயங்கியதே இல்லை. இலவசமாக குடிக்கும் குடிநீரில் கூடவா இப்படி என கேட்பார். மேலும் அவ்வப்போது சுத்தம் செய்யாமல் இருக்க ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக குளோரினை போட்டு குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதையும் கண்டித்தார்.
ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் துணை மாவட்ட ஆட்சியராக சத்தியமங்கலம் வனப்பகுதிக்குள் சென்று உள்ளூர் மக்களைச் சந்தித்தார். அமுதா பதவியேற்ற போதுதான் உள்ளூர் மக்கள் அரசை நம்பத் தொடங்கினர். அது போல் தருமபுரியில் பெண்களை மேம்படுத்துவதில் தனது பணிகளுக்கு பெயர் பெற்றவர். பெண் சிசு கொலைகளை தடுத்து நிறுத்தியவர். குழந்தை திருமணம் உள்ளிட்ட சமூக அவலங்களுக்கு முடிவு கட்டியவர். சுய உதவி குழுக்களின் பங்களிப்புடன் பெண்களிடையே கல்வியறிவு விகிதத்தை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டார். இவர் செங்கல்பட்டு சட்டவிரோத மணல் சுரங்கம் மீது நடவடிக்கை எடுத்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தின் போது சென்னையே தத்தளித்த போது மிகவும் திறமையான கள அலுவலராக அறியப்பட்டதால் பருவமழை நிவாரணத்திற்கான சிறப்பு அதிகாரியாக அமுதா நியமிக்கப்பட்டார். நீர்நிலைகள் மற்றும் வெள்ளம் தேங்கி ஆக்கிரமித்துள்ள ஏராளமான கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டார்.
தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து முடிவதில் வல்லவர் என்பதை நிரூபிக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் முதல்வர்களின் இறுதி சடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தின் போது அவருடைய இறுதி சடங்குகளுக்கு ஏற்பாடு செய்யும் பொறுப்பு அமுதாவுக்கு வழங்கப்பட்டது. அப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏதும் ஏற்படாத வகையில் திறமையாக கையாண்டார். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் இறுதிச் சடங்கு ஏற்பாட்டையும், இவர்தான் திறமையாக செய்திருந்தார். ராமேஸ்வரத்தில் நடந்த இந்த நிகழ்வில், பிரதமர் உள்ளிட்ட பெரிய தலைவர்கள் வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இறுதிச் சடங்குகளை செய்த போதும் எந்த பிசிறும் இல்லாமல் செய்தவர். அதாவது மெரினா கடற்கரையில்தான் நடைபெறப் போகிறது என்பது இவருக்கு சுமார் 5 மணி நேரம் முன்பாகத்தான் சொல்லப்பட்டது. ஏனெனில், நினைவிடம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது. அப்படியான கொந்தளிப்பு சூழலிலும், குறைந்த நேரத்திலும் கருணாநிதி இறுதிச் சடங்கில், பல லட்சம் பேர் சேர்ந்த கூட்டத்திற்கு இடையே சிறப்பாக செய்து முடித்தார் அமுதா. வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு, அங்கும் இங்கும் துருதுருவென நடந்து அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து கொண்டிருந்ததை டிவிகளில் மக்கள் பார்த்து வியப்படைந்தனர். இறுதிச் சடங்கு முடிந்து, நல்லடக்கம் நடைபெற்றபோது, கருணாநிதி குடும்பத்தார் மட்டுமின்றி, அமுதாவும், மணலை எடுத்து போட்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
முன்னாள் முதல்வர்களின் நன்மதிப்பை பெற்ற அமுதா ஐஏஎஸ் உத்தரகாண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அமுதாவுக்கு பிரதமர் அலுவலக இணை செயலாளர் பதவி கடந்த 2020 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இதையடுத்து முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும் அமுதா ஐஏஎஸ் ஊரக வளர்ச்சி துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.