எந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டுக்காக, மலேசியாவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஷங்கர் இயக்கியிருக்கும் படம் எந்திரன். இதை சன் நெட்வொர்க் தலைவரும் சன் பிக்சர்ஸ் அதிபருமான கலாநிதி மாறன் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார். இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் கவரும் வண்ணம், அதி நவீன தொழில் நுட்பத்துடன் படத்தை இயக்குனர் ஷங்கர் உருவாக்கி உள்ளார். இதற்கான தொழில்நுட்ப பணிகள் மட்டும் வெளிநாட்டில் பல மாதங்கள் நடந்து வந்தது. இந்த படத்தின் பாடல்கள் நாளை மலேசியாவில் நடைபெறும் மாபெரும் வண்ணமிகு விழாவில் வெளியிடப்படுகிறது. விழாவில், சீனாவை சேர்ந்த ஷாவ்லின் மாங்க்ஸ் பங்கேற்கும் அதிரடி சாகச சண்டை காட்சிகள் இடம்பெறுகிறது. இதில் சீன துறவிகள், மெய்சிலிர்க்க வைக்கும் பலவிதமான சாதனை சண்டை காட்சிகளை நடத்துகின்றனர். இந்த துறவிகள் இளம் வயதிலேயே குங்க்ஃபூ கலையை கற்றவர்கள். இவர்களின் இந்த நிகழ்ச்சிகள் உலக நாடுகளின் பிரபலமானது. அந்தரத்தில் பறப்பது, கூரிய வாள்களால் மோதுவது, அதில் படுத்துக்கொண்டு சாகசம் புரிவது, தலையால் பல செங்கல்களை உடைப்பது என சீன படங்களில் மட்டுமே பார்த்திருக்கக் கூடிய இந்த சாகசங்கள் நேரடியாக விழா மேடையில் நடத்தப்பட இருக்கிறது. இந்த சாகசங்களுக்கு சினிமா சரித்திரத்தில் ஒரு இட ஒதுக்கீடு குடுங்கப்பா.....
நடிகர் கார்த்தி குறித்து அதிக அளவில் வதந்திகள் வர ஆரம்பித்துள்ளதைத் தொடர்ந்து அவரது வீட்டில் பெண் பார்க்கும் படலத்தை முடுக்கி விட்டுள்ளனராம். அவரது தாயார்தான் இதில் படு மும்முரமாக இருக்கிறாராம். இதை கார்த்தியே கூறியுள்ளார். நடிகர்கள், நடிகைகள் என்றால் வதந்திகளும் கூடவே பின் தொடர்ந்து வந்து விடுகிறது. அந்த வகையில், தற்போது நடிகர் கார்த்தி குறித்துதான் நிறைய வதந்திகள். தமன்னாவுடன் இணைத்துப் பேசுகிறார்கள். மறுபக்கம் காஜல் அகர்வாலும், கார்த்தியை விழுந்து விழுந்து புகழ்ந்து பேசுகிறார். இப்படி பல முனைகளிலிருந்தும் சரமாரியாக கார்த்தியை மையம் வைத்து பெண்களும், வதந்திகளும் பெருக ஆரம்பித்திருப்பதால் அவரது வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார்களாம். இதுகுறித்து கார்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னையும், தமன்னாவையும் இணைத்து வரும் செய்திகளில் உண்மை இல்லை. அது வெறும் வதந்தியே. பிரபலமாகி வருபவர்களை பற்றி வழக்கமாக வரும் விஷயம்தான் இது என்று சுலபமாக எடுத்துக்கொள்கிறேன். எந்தவிதத்திலும் நான் வருத்தப்படவில்லை. கவலைப்படவும் இல்லை. இந்த வதந்தி ஒரு பெண்ணை பாதிப்பதால், மறுப்பு தெரிவித்து வருகிறேன். எனக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள். எங்க அம்மா மிக தீவிரமாக எனக்கு பெண் தேடி வருகிறார். தமிழ்நாடு முழுவதும் மணப்பெண் வேட்டை நடக்கிறது. வேலைக்கு போகும் பெண்ணை திருமணம் செய்துகொள்வதில், எனக்கு உடன்பாடு இல்லை. வீட்டுக்கு அடங்கிய பெண்ணாக இருக்க வேண்டும். குடும்பத்தை கவனித்துக் கொள்கிற பெண்ணுக்காக, நான் காத்திருக்கிறேன். சினிமா நடிகருக்கு பெண் கொடுப்பது என்றால், பெற்றோர்கள் கொஞ்சம் தயங்கத்தான் செய்கிறார்கள். எங்க குடும்பத்தை பற்றி முழுமையாக தெரிந்து இருந்தால், தயங்க மாட்டார்கள். பொதுவாகவே ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும்போது டாக்டர், என்ஜினீயர், நடிகர் என்று மூன்று மாப்பிள்ளைகளின் ஜாதகம் வந்தால், டாக்டரையும், என்ஜினீயரையும்தான் முதலில் தேர்வு செய்வார்கள். அதை தப்பு என்று சொல்ல முடியாது என்றார். அண்ணி மாதிரி உங்களுக்கும் அம்சமா ஒரு பொண்ணு அமையாமலா போவார்?
இந்தியாவின் நம்பர் ஒன் கதாநாயகியான ஐஸ்வர்யா ராயின் சமீபத்திய படம் வெற்றி பெறவில்லை என்றாலும்கூட, அவரது மார்க்கெட் உலகளவில் ஏறிக் கொண்டே போகிறது. சர்வதேச அளவில் உலகப் புகழ் பெற்ற அழகு சாதனப் பொருள் ஒன்றுக்கான விளம்பரத்தில் பிரபல ஹாலிவுட் நடிகையும், டைட்டானிக் நாயகியுமான கேத் வின்ஸ்லெட்டுடன் இ€ணைந்து நடிக்கிறார் ஐஸ்வர்யா ராய். இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் இத்தாலியில் இரண்டு நாட்கள் நடந்தது. அப்போது சந்தித்துக் கொண்ட இருவரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். மேலும் ஒருவருடைய அழகை மற்றவர் புகழ்ந்து கொண்டனர். அகாடமி விருது வென்ற கேத் வின்ஸ்லெட்-ஐ பாராட்டினார் ஐஸ். இருவரும் இந்த அழகு சாதன நிறுவனத்தின் சர்வதேச தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் முன்னணி நிறுவனத்தின் தூதுவராக இந்திய நடிகை நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்று பெருமைப்படுகின்றனர் இந்தி திரையுலகினர். விரைவில் தொலைக்காட்சியில் இரு அழகு தேவதைகளை கண்டு ரசிக்க ஆவலோடு காத்திருக்கின்றனர் ரசிகர்கள்! அழகு தேவதைகளே அழகுக்கு அர்ச்சனை செய்றாங்களாம்ப்பா....!
முதலமைச்சர் கருணாநிதி கதை, வசனத்தில் கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக நடிக்கும் இளைஞன் படத்தில் நமிதா வில்லியாக நடிக்கிறார். இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் எங்கள் அண்ணா. ஏய், சாணக்யா, ஆணை போன்ற பல படங்களில் நாயகியாக நடித்தார். கடைசியாக சுந்தர்.சியுடன் குரு சிஷ்யன் படத்தில் நடித்தார். தற்போது இளைஞன் தவிர தெலுங்கு, கன்னட மொழிகளில் தலா ஒருபடம் நடித்து வருகிறார். கடும் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடுகள் மூலம் தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். இளைஞன் படத்தில் மீராஜாஸ்மின், ரம்யா நம்பீசன், குஷ்பு, சுமன் போன்றோரும் நடிக்கின்றனர். படப்பிடிப்பு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நடந்து வருகிறது. வில்லியாக நடிப்பது பற்றி நமிதா சொல்கிறார். நான் இப்படத்தில் மோசமான பெண் கேரக்டரில் நடிக்கிறேன். இந்த படத்தை பார்த்து ரசிகர்கள் என்னை வெறுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த படத்தில் நடிக்கும் கேரக்டர் போல நிஜ வாழ்க்கையில் நான் இல்லை. எனவே என்னை வெறுக்க வேண்டாம், என்று கூறினார். நமி.... எப்படி நடிச்சாலும் மச்சான்ஸ்களுக்கு கிக்குதான்!
3 இடியட்ஸ் ரீமேக்கில் யார் யாரை நடிக்க வைப்பது என்பது இன்னும் முடிவாகவில்லை. கதாநாயகர்கள் மட்டுமல்ல கதாநாயகிகள் விஷயத்திலும் இழுபறிதான். 3 இடியட்ஸ் ரீமேக்கை ஷங்கர் இயக்குவதால் எப்படியும் படத்தில் இடம்பெறுவது என நடிகைகள் மத்தியில் ஒரே தள்ளுமுள்ளு. ஆனால் இறுதி லிஸ்டில் இடம் பிடித்திருப்பவர்கள் த்ரிஷாவும், இலியானாவும்தான். இவர்களில் யார் கரீனா கபூர் நடித்த வேடத்தில் நடிக்கப் போகிறார் என்பதை இவர்களின் கால்ஷீட்டும், ஷங்கரும்தான் முடிவு செய்வார்கள். எந்திரன் வெளியீடுக்கு முன்பே இதற்கான விடை தெரிந்துவிடும் என்கிறார்கள் ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்டில். அந்த அதிர்ஷ்ட இடியட் யாருன்னு சீக்கிரம் சொல்லுங்கப்பா.....