உக்ரைன்- ரஷியா போரை நிறுத்த ஐ.நா. பொதுச்செயலாளர், இரு நாட்டு அதிபர்களையும் சந்திக்கிறார்
ஐ.நா. பொதுச்செயலாளர்
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்கியது. உக்ரைனின் தலைநகர் கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை, வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷியா கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. அங்குள்ள துறைமுக நகரமான மரியுபோலை கைப்பற்றி விட்டதாக ரஷியா அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 2-வது மாதத்தை எட்டி இருக்கிறது. போரை நிறுத்த ரஷியாவுக்கு ஐ.நா. சபை, உலக நாடுகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் அதனை நிராகரித்து ரஷியா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ், போரை நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் வருகிற 26-ந்தேதி ரஷிய தலைநகர் மாஸ்கோவுக்கு செல்கிறார். அங்கு ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசுகிறார். அப்போது உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்தும்படி புதினிடம் வலியுறுத்துவார். அதேபோல் 28-ந்தேதி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் சந்தித்து ஆண்டனியோ குட்டரெஸ் பேசுகிறார்.
இதுகுறித்து ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் கனேசோ கூறும்போது, ஐ.நா. பொதுச்செயலாளர் ரஷியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசுகிறார். உக்ரைனில் உடனடியாக அமைதி ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க புதினிடம் வலியுறுத்துவார் என்றார்.
குட்டரெஸ் தனது சுற்றுப்பயணத்தில் ரஷியா மற்றும் உக்ரைன் வெளியுறவு மந்திரிகளையும் சந்தித்து பேசுகிறார்.
இந்த நிலையில் கிழக்கு உக்ரைனை தவிர தெற்கு பகுதியையும் ரஷியா குறி வைத்து உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் கூறும்போது, “நம்மை போலவே மரணத்தின் மீதான வாழ்க்கையின் வெற்றியை நம்பும் அனைத்து நாடுகளும் எங்களுடன் இணைந்து போராட வேண்டும். ஏனென்றால் நாங்கள் வரிசையில் முதலில் இருக்கிறோம். அடுத்து யார் வருவார்கள்? என்று எண்ணி பார்க்க வேண்டும். உக்ரைனின் தெற்கு பகுதிகளை கைப்பற்ற ரஷியா திட்டமிட்டு வருகிறது” என்றார்.
கடந்த 13-ந்தேதி கருங்கடல் பகுதியில் ரஷியாவின் ‘மாஸ்க்வா’ போர்க்கப்பல் மீது உக்ரைன் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அந்த கப்பல் தீப்பிடித்து எரிந்தது. கப்பலில் இருந்த அனைத்து ஊழியர்களும் வெளியேற்றப்பட்டதாகவும், கப்பலை துறைமுகத்துக்கு இழுத்து சென்றபோது மூழ்கியதாகவும் ரஷியா தெரிவித்தது.
இந்த நிலையில் போர்க் கப்பல் மீதான தாக்குதலில் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதை ரஷியா முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. இதுகுறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, “மாஸ்க்வா போர்க் கப்பலில் இருந்த வெடிமருந்தில் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழந்தர். 27 ஊழியர்கள் மாயமாகி இருக்கிறார்கள். மீதமுள்ள 396 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 21,200க்கும் மேற்பட்ட ரஷிய வீரர்கள் கொல்லப் பட்டதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. 2,162 ராணுவ வாகனங்கள் சேதமடைந்துள்ளன. ரஷிய ராணுவத்தின் 838 பீரங்கிகள், 176 போர் விமானங்கள், 153 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. மேலும் 1,523 வாகனங்கள் சேத்மடைந்துள்ளன என தெரிவித்துள்ளது.