பாஜகவினரின் கோரிக்கையை ஒரு எம்எல்ஏ கூட ஏற்காதது மகிழ்ச்சியாக இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி ஆம் ஆத்மி எம்எல்எக்களிம் பாஜக பேரம் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இதுகுறித்து குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில், கெஜ்ரிவால் இல்லத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில், பாஜகவினர் பேரம் பேசிவருவது குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஆம் ஆத்மியின் 62 எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 53 பேர் மட்டுமே பங்கேற்றனர். மீதமுள்ளவர்கள் கெஜ்ரிவாலிடம் செல்போனில் தொடர்புகொண்டு ஆதரவளித்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களுடன் காந்தி நினைவிடத்திற்கு சென்ற கெஜ்ரிவால் அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் கெஜ்ரிவால் பேசியதாவது:-
மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்த வந்தோம். சில நாள்களுக்கு முன்பு மணீஷ் சிசோடியா மீது பொய் வழக்கு பதியப்பட்டு 12 மணிநேரம் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது. ஆனால், கணக்கில் வராத பணமோ, ஆவணங்களோ கைப்பற்றப்படவில்லை. ஆம் ஆத்மி மற்றும் கெஜ்ரிவாலிடம் இருந்து விலக வேண்டுமென்று சிசோடியாவுக்கு பாஜகவிலிருந்து செய்தி அனுப்பப்பட்டது. பிற எம்.எல்.ஏ.க்களுடன் பாஜகவில் இணைந்தால், அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவதுடன், முதல்வர் பதவி வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
மணீஷ் சிசோடியா போன்ற ஒருவர் என்னுடன் இருப்பதற்கு, நான் கடந்த காலங்களில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். பாஜகவின் அழைப்பை அவர் நிராகரித்துள்ளார். தற்போது எம்.எல்.ஏ.க்களிடம் பாஜகவினர் பேரம் பேசி வருகின்றனர். பாஜகவில் இணைந்தால் ரூ. 20 கோடி கொடுப்பதாக கூறியுள்ளனர்.
ஒருவர்கூட இந்த வாய்ப்பை ஏற்கவில்லை என்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன். நேர்மையான கட்சிக்கு வாக்களித்துள்ளீர்கள் என்பதை டெல்லி மக்களுக்கு கூற விரும்புகிறேன். செத்தாலும், நாட்டு மக்களுக்கு துரோகம் இழைக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.