திமுக விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாதது ஏன்?: சீமான்

திமுகவில் உள்ள தொண்டர்களில் 90 சதவிகிதம் இந்துக்கள் என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாதது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

விநாயகர் சதுர்த்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறாதது பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே பாஜகவைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களான மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத அரசியல் செய்வதாக பாஜகவினர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:-

எம்மதமும் சம்மதம் என சொல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், இந்துக்களின் பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இஸ்லாமிய, கிறிஸ்தவ பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறாமல் இருந்தால், இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. திடீரென தேர்தல் வரும்போது நானும் இந்துதான், எங்கள் கட்சியில் இருக்கும் தொண்டர்களில் 90 சதவிகிதம் இந்துக்கள் தான் என்று சொல்வது நானா? நீங்களா? அப்படி ஏன் சொல்ல வேண்டும்? வாழ்த்து கூறாதது ஏன்? 90 விழுக்காடு திமுகவில் இந்துக்கள் தானே இருக்கிறார்கள். அவர்களின் பண்டிகைக்கு அவர்களின் வழிபாட்டுக்கு வாழ்த்து கூறுலாம். அடுத்த வாரம் தேர்தல் என்றால் இதே விநாயகர் சதுர்த்திக்கு நீங்கள் வாழ்த்து சொல்வீர்களா மாட்டீர்களா என்று கேள்வி எழுப்பினார். எம்மதமும் சம்மதம்னு சொல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்து மதம் மட்டும் ஏன் ஏற்புடையதல்ல என்று கேள்வி எழுப்பினார்.