ஐ.என்.எஸ்., விக்ராந்த் போர் கப்பலை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்!

கடற்படை வரலாற்றில் முதன்முறையாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரமாண்ட, ‘ஐ.என்.எஸ்., விக்ராந்த்’ விமானம் தாங்கி போர் கப்பலை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்த்தார்.

கடற்படைக்காக, ஐ.என்.எஸ்., விக்ராந்த் என்ற பிரமாண்ட விமானம் தாங்கி போர் கப்பலை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இந்திய கடற்படைக்கு சொந்தமான, ‘வார்ஷிப் டிசைன் பீரோ’ என்ற நிறுவனம் இந்த கப்பலை வடிவமைத்தது. கேரளாவின் கொச்சியில் உள்ள அரசு பொதுத் துறை நிறுவனமான, ‘கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்’ இந்த கப்பலை உருவாக்கியது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களால் இந்த கப்பல் உருவாக்கப்பட்டது. முன்னணி தொழில் நிறுவனங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உபகரணங்களை தயாரித்து தந்துள்ளன. மொத்தம், 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கப்பல், 860 அடி நீளமும், 203 அடி அகலமும் உடையது. 4.30 கோடி கிலோ எடையை சுமக்கும் திறன் உடையது.

மணிக்கு 56 கி.மீ., வேகத்தில் பயணிக்கக் கூடியது. 2,200 பிரிவுகளுடன், 1,600 வீரர்கள் பயணிக்க கூடிய இந்த கப்பல், பெண் வீராங்கனையருக்கான பிரத்யேக வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், உயர்தர மருத்துவமனையில் இருக்கக் கூடிய அத்தனை வசதிகளும் இடம்பெற்று உள்ளன. சமீபத்திய நவீன மருத்துவ உபகரணங்கள், ‘பிசியோதெரபி’ பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, பரிசோதனை கூடங்கள் ஆகியவை உள்ளன. இந்த கப்பலில், ‘மிக்29கே’ ரக போர் விமானங்கள், ‘கமோவ் 31, எம்.எச்.60ஆர்’ ரக ஹெலிகாப்டர்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன இலகுரக ஹெலிகாப்டர்கள், இலகுரக விமானங்கள் உட்பட, 30க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கும் வசதி உள்ளது. இந்த கப்பலில் மிக குறுகிய துாரத்தில் விமானம் மேல் எழுப்பி செல்லும் நவீன, ‘ஸ்டோபார்’ தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.

இந்த கப்பலை உருவாக்கியதன் வாயிலாக, உள்நாட்டில் விமானம் தாங்கி போர் கப்பலை வடிவமைத்து உருவாக்குவதற்கான திறனை உடைய அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா, பிரான்ஸ் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் குழுவில் இந்தியாவும் இணைந்துள்ளது.கொச்சி கடற்படை தளத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த நிகழ்வில் காலனித்துவ காலத்திலிருந்த கடற்படை கொடி முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை குறிக்கும் வகையில், புதிய கடற்படைக் கொடியை வெளியிட்ட பிரதமர் இதனை சத்ரபதி சிவாஜிக்கு அர்ப்பணித்து ஏற்றிவைத்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

கேரள கடற்கரையில் இந்தியா மற்றும் ஒவ்வொரு இந்தியரும் புதிய வருங்காலத்திற்கான சூரிய உதயத்தை கண்டுகளிக்கின்றனர். விமானம் தாங்கிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த்தை கடற்படையில் சேர்ப்பது உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தும். நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவான வலிமைமிக்க இந்தியாவை உருவாக்கும் நோக்கத்திற்கு ஐஎன்எஸ் விக்ராந்த் ஒரு சான்றாகும். விக்ராந்த் வலிமையானது, மிகப்பெரியது, அதிக ஆற்றல் வாய்ந்ததாகும். விக்ராந்த் தனித்துவமானது. ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் மட்டுமல்ல. 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் கடின உழைப்பு, திறமை, செல்வாக்கு மற்றும் அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்று. இலக்குகள் தூரமாக இருந்தால் பயணமும் நீண்டிருக்கும் அதுபோலவே இங்கு கடல். அதனால் சவால்களும், முடிவில்லாதவைகளாக இருக்கும். இதற்கு தீர்வுதான் விக்ராந்த். இந்தியா தன்னிறைவு பெற்று வருவதை குறிக்கும் விதமாக விக்ராந்த் அமைந்துள்ளது.

இன்றைய இந்தியாவில் எந்தவொரு சவாலும் அதிக கடினமாக இருப்பதில்லை. உலக அரங்கில் உள்நாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் மிகப்பெரிய விமானம் தாங்கிய போர்க்கப்பலை உருவாக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் இன்று நாடு முழுவதும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்காக பணியாற்றிய கப்பற்படை, கொச்சி கப்பல்கட்டும் தளத்தை சேர்ந்த பொறியாளர்கள், விஞ்ஞானிகள் குறிப்பாக இத்திட்டத்திற்காக உழைத்த பணியாளர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். தன்னிறைவு- தனித்துவம் ஐஎன்எஸ் விக்ராந்த்தை நாட்டுக்கு அர்ப்பணித்ததன் மூலம் ஏற்பட்ட மகிழ்ச்சியை அதிகரிக்கும் வகையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டமும் சேர்ந்துள்ளது.

ஐஎன்எஸ் விக்ராந்தின் ஒவ்வொரு பகுதியும், திறமை, வலிமை மற்றும் வருங்கால வளர்ச்சிக்கானதை தன்னுள்ளே கொண்டுள்ளது. இந்தியா தன்னிறைவு பெற்றதன் தனித்துவமான பிரதிபலிப்புதான் ஐஎன்எஸ் விக்ராந்த். விமான தளத்தில் பொருத்தப்பட்டுள்ள எஃகு டிஆர்டிஓ விஞ்ஞானிகள் மூலம் இந்திய நிறுவனங்களால் உருவாக்கப்பட்டது. ஐஎன்எஸ் விக்ராந்த்தை பார்க்கும் போது ஒரு நகரமே மிதந்து செல்வது போல் உள்ளது. அதன் மூலம் ஏற்படும் மின்சக்தியினால் 5000 வீடுகளுக்கு மின் வசதியை ஏற்படுத்த முடியும். அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மின்வயர்களின் நீளம் கொச்சி முதல் காசி வரை நீண்டு செல்லும் அளவில் உள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த், ஆயுர்வேதத்தில் உள்ள முக்கிய ஆற்றலின் ஐந்துவகையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் சான்றாக இருப்பதை செங்கோட்டையின் பாதுகாப்பு அரணுடன் ஒப்பிட்டுகிறேன்.

எதிரிகளை மிரட்டும் வகையில் சத்ரபதி வீர் சிவாஜி மகராஜ் கப்பற்படையை கட்டமைத்திருந்தார். பிரிட்டிஷ்காரர்கள் இந்தியா வந்த போது நம்நாட்டின் கப்பல்கள் மற்றும் அதன் மூலம் நடைபெறும் வர்த்தகம் போன்றவைகள் மூலம் அச்சுறுத்தப்பட்டன. இதன் விளைவாக நமது கடல்சார் வலிமையை வலுவிழக்க செய்ய முடிவு செய்தனர். அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் பார்லிமெண்டில் சட்டம் இயற்றி, இந்திய கப்பல்கள் மற்றும் வணிகர்கள் மீது மிகக்கடுமையான தடைகளை விதிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

வரலாற்றில் இன்று செப்டம்பர் 02, 2022 ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். அடிமைத்தனத்தின் அடிச்சுவட்டை இந்தியா அகற்றுவதை நன்கு உணர்கிறோம். இந்திய கப்பற்படைக்கு இன்று புதிய கொடி கிடைத்துள்ளது. இந்திய கடற்படையின் கொடியில் இதுவரை அடிமைத்தனத்தின் அடையாளம் இருந்தது. ஆனால் இன்று முதல் சத்ரபதி சிவாஜியின் உத்வேகத்தால் புதிய கடற்படைக் கொடி கடலிலும், வானிலும் பறக்கும். புதிய இந்தியாவின் புதிய அடையாளம் விக்ராந்த் நமது கடல்சார் பகுதிகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் போது பல பெண் வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள். கடலின் மகத்தான சக்தியுடன், எல்லையற்ற பெண் சக்தியும் இணைந்து செயலாற்றும் போது, புத்தம் புதிய இந்தியாவின் சிறந்த அடையாளமாக அமையும். தற்பொழுது இந்திய கடற்படையில் அனைத்து துறையிலும் பெண்கள் களம் காணவிருக்கிறார்கள். இதற்கு முன்பு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. கடல் அலைகளுக்கு எப்படி கட்டுப்பாடுகள் இல்லையோ, அதுபோலவே இந்நாட்டின் மகள்களுக்கும் கப்பற்படையில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை.

ஒவ்வொரு துளி நீரும் சேர்ந்து, சேர்ந்து சமுத்திரம் உருவாகிறது. இந்த சுதந்திர தினத்தில் உள்நாட்டு படைப்புகளின் முக்கியத்துவத்திற்கு தலைவணங்கியதை நினைவுபடுத்துகிறேன். இதேபோல், ஒவ்வொரு இந்திய குடிமகனும் ‘உள்ளூர் மக்களுக்கான குரல்’ என்ற மந்திரத்தை பின்பற்ற ஆரம்பித்தால், நாடு தன்னிறைவு பெற அதிக காலம் ஆகாது. மாறிவரும் புவி-உத்தி ராஜாங்க சூழ்நிலையில் இந்திய- பசிபிக் பகுதி மற்றும் இந்திய பெருங்கடல் பகுதி போன்றவைகள் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த காலத்தில் இந்த பகுதிகள் பாதுகாப்பு பணிகளில் இருந்து புறக்கணிக்கப்பட்டது. தற்போது இந்தப் பகுதிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்காக பட்ஜெட்டில் கடற்படைக்கென கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது. இதன் விளைவாக இந்தப் பகுதிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் வலிமை பெறும். அமைதியான, பாதுகாப்பான உலகிற்கு இந்தியா வழிவகுக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

1971-ஆம் ஆண்டு போரில் முக்கிய பங்காற்றிய இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலின் நினைவாக அதன் பெயரே இந்த போர்க்கப்பலுக்கும் சூட்டப்பட்டுள்ளது. 100 எம்.எஸ்.எம்.இ-க்கள் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறை நிறுவனங்களின் உபகரணங்களையும், இயந்திரங்களையும் விக்ராந்த் போர்க்கப்பல் தன்னகத்தே கொண்டுள்ளது. விக்ராந்த் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட பிறகு, நாட்டின் கடல்சார் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் வகையில் இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் இந்திய கடற்படையில் இயங்கும்.