மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் சந்திப்பு!

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நியாயம் கிடைக்க, தேவையான அனைத்து சட்டப்பூர்வ உதவிகளை செய்ய பாஜக துணை நிற்கும் என அண்ணாமலை உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

ஸ்ரீமதியின் தாய் செல்வி அண்மையில்தான் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து மகளின் மரண வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அந்த சந்திப்பிற்கு பிறகு தாய் செல்வி பேசியபோது, ஸ்ரீமதியின் வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்ததாக தெரிவித்தார்.

இதற்கிடையே, பள்ளி மாணவி வழக்கில் கைதான பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கின்போது, மாணவியின் மரணம் கொலையல்ல, பலாத்காரமும் இல்லை, தற்கொலையெனக்கூறி நீதிமன்றம் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கியது.

இதனை அடுத்து, ஒரு மர்ம வழக்கு விசாரணையில் இருக்கும்போதே எதன் அடிப்படையில் மாணவி இப்படித்தான் இறந்தார் என நீதிமன்றம் அறிவித்தது என பலரும் கேள்வி எழுப்பினர். மேலும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் நீதிபதியின் அறிவிப்புக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையை ஸ்ரீமதியின் தாயார் செல்வி சந்தித்து, மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தது தொடர்பாக கோரிக்கை மனுவை அளித்தார். பின்னர், தங்களுடை மகள் மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் உள்ளது. அதில் உள்ள மர்மங்களை முடிவுக்கு கொண்டு வர பாஜக சார்பில் தங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த விவகாரம் தொடர்பாக சட்டரீதியாக பாஜகவும் ஆதரவு அளிக்கும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.