யுவன்சங்கர் ராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்!

சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் 31வது பட்டமளிப்பு விழாவில், 150 படங்களுக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைகழகத்தின் 31வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி(நாளை) நடைபெறவுள்ளது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் மரிய ஜான்சன் ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த பட்டமளிப்பு விழாவில் (மத்திய பாதுகாப்பு தளவாட) ஆராய்ச்சி நிலைய செயலாளர் மற்றும் தலைவர் சதீஷ் ரெட்டி பங்கேற்று பட்டங்களை வழங்கவுள்ளார். விழாவில் பல்கலைகழகத்தின் துணைத் தலைவர்கள் மரிய பெர்னாட்டி அருள் செல்வன், அருள் செல்வன், மரியா கேத்தரின் ஜெயப் பிரியா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இந்த விழாவில், திரைப்படத்துறையில் தனது 16 வயது முதல் இசையமைப்பாளராக பணியை துவக்கி, 25 ஆண்டுகளுக்குள் 150 படங்களுக்கு மேலாக பல்வேறு மொழிகளில் இசையமைப்பாளராக சாதனை படைத்த யுவன் சங்கர் ராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. மேலும் பிரபல விஞ்ஞானியும் மத்திய ராணுவத்திற்கு எடை குறைவான அர்ஜுன் ராணுவ டேங்க்கை வடிவமைத்த சாதனை விஞ்ஞானி டாக்டர் வி. பாலகுருவுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இவர் ஏற்கனவே இருந்த அர்ஜுன் டேங்கில் 5 முக்கிய மாற்றங்களையும் 25 சிறு சிறு வசதிகளையும் மேம்படுத்தி திறமையாக செயல்படும் நவீன ரக ராணுவ டேங்க்கை உருவாக்கியுள்ளார் ஆவார். அத்துடன், 31 வது பட்டமளிப்பு விழாவில், சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் 2257 இளங்கலை பட்டதாரி மாணவர்களுக்கும் 409 மேல்நிலைப் பட்டதாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் 143 பிஎச்டி மாணவர்களுக்கு டாக்டர் பட்டமும் வழங்கப்படுகிறது. சாதனை மாணவர்கள் 23 பேருக்கு தங்க மெடல்கள் என மொத்தம் 2666 மாணவர்களுக்கு சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பட்டங்கள் வழங்கப்படுகிறது.