அர்ஜென்டினா துணை அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டசை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவம் நடந்தது. கொல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
அர்ஜென்டினா துணை அதிபராக கிறிஸ்டினா பெர்னாண்டஸ் உள்ளார். இவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ளன. இந்நிலையில் வழக்கு ஒன்றில் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு பிய்னோஸ் எய்ரேஸ் நகரில் உள்ள தனது இல்லத்திற்கு வந்தார். அவரது ஆதரவளர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். அப்போது கூட்டத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம ஆசாமி, கிறிஸ்டினா பெர்னாண்டஸ் நெற்றி மீது துப்பாக்கியை காட்டி சுட முயன்றான். ஆனால், பிஸ்டல் செயல்படாத காரணத்தால் கிறிஸ்டினா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதில் அவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. தப்பியோட முயன்ற அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து, அர்ஜென்டினாவின் அதிபர் ஆல்பர்டோ கூறுகையில், ”இது, 1983ல் நாம் ஜனநாயகத்தை மீட்டெடுத்த பின் நடைபெற்ற மிக மோசமான சம்பவம். மக்களின் அமைதியை சீர்குலைக்கும் இதுபோன்ற செயல்களை வன்மையாக கண்டிக்கிறோம்,” என்றார். கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்தனர்.