சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு 46 பேர் பலி!

சீனாவில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல்வேறு குடியிருப்புகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இது போன்ற இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று மதியம் 12.25 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. லுடிங் நகரில் இருந்து 39 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் அதிர்ந்தன. நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் அலறியடித்துக்கொண்டு சாலைகள், வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தில் 46 பேர் உயிரிழந்தனர். மேலும், 50 பேர் படுகாயமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களில் 29 பேர் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஹன்சி தீபெதின் நகரில் அமைந்துள்ள லுடிங்கை சேர்ந்தவர்கள் என்றும் 17 பேர் யாயன் நகரத்தை சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் மேலும் சிலர் மாயமாகியுள்ளதால் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சீனாவில் கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கங்டிங் நகரம் சில வினாடிகள் ஸ்தம்பித்தது என்றுதான் சொல்ல வேண்டும். வீடுகள் அதிர்ந்ததால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். பின் அதிர்வுகளால் அங்குள்ள ஊரக பகுதிகள் பலவற்றில் மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள், கட்டிடங்களும் சேதம் அடைந்தன.

நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பின் அதிர்வுகளும் ஏற்பட்டதால் மக்களின் அச்சம் அதிகரித்தது. நிலநடுக்கத்தால் பல இடங்களில் மலைச்சரிவு ஏற்பட்டதாகவும், பல இடங்களில் குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது போன்ற இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்ததாகவும் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து தற்போது நாட்டில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் இடிபாடுகளில் சிக்கியவர்களும் காயத்துடனும், பிணமாகவும் மீட்கப்பட்டு வருகின்றனர். இதில் தற்போது வரை நிலநடுக்கத்தால் 46 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கபட்ட இடங்களில் நூற்றுக்கணக்கான மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளுடன் டிரக்குகள் நெடுஞ்சாலைகளில் அணிவகுத்து செல்லும் காட்சிகள் அந்நாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

மாகாண தலைநகரிலும் செங்டு நகரிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டு இருந்தன. செங்டு நகரில் ஏற்கனவே கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் உள்ள சூழலில் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களுக்கு மேலும் அச்சத்தை அதிகரித்தது.