கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் ஆங்காங்கே வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் அன்றாட பணிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
கர்நாடகவில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடாது மழை விடாது பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால், பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு நகரின் முக்கிய பகுதியான சர்ஜாபூர், மெஜிஸ்டிக், சில்க்போர்டு, எலங்கா உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பல மணிநேரம் காத்திருந்து வாகனங்கள் ஊர்ந்து சென்று வருகின்றன. பெங்களூரு நகரின் ஒயிட் பீல்டு பகுதியில் வெள்ளநீரில் இருசக்கர வாகனத்தை தள்ளிச்சென்ற அகிலா(23) என்ற இளம்பெண் மின் கம்பத்தில் கை வைத்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
தாழ்வான பகுதிகளில் உள்ள ஐடி நிறுவன ஊழியர்கள் டிராக்டர், ஜேடிபி மற்றும் படகுகளை பயன்படுத்தி அலுவலங்களுக்கு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெல்லந்தூர் ஏரி முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. தாழ்வான பகுதியில் தேங்கிய மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட அரசு பேருந்து ஒன்றை பொதுமக்கள் கயிறு கட்டி இழுத்து மீட்டனர்.
பெங்களூரு நகரில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மழைநீரை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இதனிடையே குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தாழ்வான பகுதியில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கர்நாடகா மற்றும் கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது
குறிப்பாக ஏமலூர், ரெயின்போ ட்ரைவ் லேஅவுட், சன்னி ப்ரூக்ஸ் லேஅவுட், மாரத்தஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதை காண முடிகிறது. பெங்களூரு மாநகரில் உள்ள மழைநீர் வடிகால்கள் மிக மிக பழமையானவை. இவற்றை முற்றிலுமாக உடைத்து விட்டு பெரிதுபடுத்த வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. ஆனால் அதற்கான போதிய இடவசதி இன்றி காணப்படுகிறது. எனவே மழைநீர் வடிகால்கள் அமைக்க சரியான இடத்தை முதலில் தேர்வு செய்ய வேண்டும். அங்கு அகலமான பாதையுடன் கூடிய வடிகால்களை அமைக்க வேண்டும்.
தற்போதுள்ள வடிகால்கள் 5 முதல் 10 செ.மீ வரையிலான மழையை மட்டுமே தாங்கக் கூடியவை. ஆனால் நேற்று மட்டும் 13 செ.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது. சில இடங்களில் 18 செ.மீ வரை மழை வெளுத்து வாங்கியிருக்கிறது. இப்படியான சூழலில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால்கள் சரியாக பயன்படுத்தப்படாமல் குப்பைகள் கொட்டும் இடமாக மாற்றி வைத்துள்ளனர். இந்த விஷயத்தில் உள்ளூர் மக்களின் அலட்சியமும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. மேலும் முறைகேடான கட்டுமானங்களும் நீர்வழிப் பாதையை தடுத்துவிட்டன. குளங்கள், ஏரிகள் இருந்த பகுதிகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகளும், வர்த்தக கட்டிடங்களுமாக உயர்ந்து நிற்கின்றன. எனவே சாக்கடை நீரும், மழைநீரும் ஒன்று சேர்ந்து கொண்டு சாலைகளில் தான் ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்ய மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தால் அவர்களும் சரியான நேரத்தில் வந்து சரிசெய்வதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. மழைக்கு முன்பாக செய்ய வேண்டிய மராமத்து பணிகள் எதையும் செய்யாமல் மெத்தனப் போக்கில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இனிமேலாவது கர்நாடக அரசு விழித்துக் கொள்ள வேண்டும். வரலாறு காணாத துயரம் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
தற்போது மழை வந்த பிறகு முதல்வர் பசவராஜ் பொம்மை முதல் மாநகராட்சி அதிகாரிகள் வரை களத்தில் இறங்கி உத்தரவுகள் பிறப்பித்தும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் எடுத்து என்ன பயன்? ஏற்பட்ட இழப்புகளை, பொருளாதார நஷ்டத்தை ஈடு செய்ய முடியாதே? சிறந்த பொறியாளர்களை கொண்டு நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கக் கூடிய வகையில் மழைநீர் வடிகால்கள் மற்றும் நீர்நிலை மேலாண்மை திட்டங்களை கர்நாடக அரசு முன்னெடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக இருக்கிறது.
இந்நிலையில் பெங்களூரு நகரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கு முந்தைய மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி அரசே காரணம் என, கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்து உள்ளார். கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பெங்களூரு நகரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கு முந்தைய மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி அரசே காரணம். அவர்கள் முறையாக திட்டமிடாமல் பணிகளுக்கு அனுமதி வழங்கியதே இந்நிலைமைக்கு காரணம். நகரில் இருந்து தண்ணீரை வெளியேற்ற 1,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. வடிகால் பணிகள் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்படாமல் இருப்பதை மாநில அரசு உறுதி செய்யும்.
வெள்ளத்தில் 430 வீடுகள் முழுமையாகவும், 2,188 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்து உள்ளன. 225 கிலோ மீட்டர் சாலைகள், பாலங்கள் மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்து உள்ளன. மழை, வெள்ளப் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய, இன்று இரவு, மத்தியக் குழு கர்நாடக மாநிலத்திற்கு வருகைத் தர உள்ளது. மத்தியக் குழு ஆய்வுக்கு பிறகு, அவர்கள் ஆலோசனை நடத்தி கோரிக்கை மனு அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.