பிரதமர் நரேந்திர மோடியின் மோடியின் காஷ்மீர் பயணம், அங்கு போலி இயல்புநிலையை முன்னிறுத்துவதற்கான மற்றொரு தந்திரம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி நேற்று காஷ்மீருக்கு சென்று ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார். இதில் கிஸ்த்வார் மாவட்டத்தில் செனாப் நதியில் ரூ.5,300 கோடியில் அமைக்கப்பட உள்ள 850 மெகாவாட் நீர்மின் திட்டம், ரூ.4,500 கோடி மதிப்பிலான குவார் நீர்மின் திட்டம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து ரத்து செய்த பிறகு அங்கு மோடி முதல் முறையாக சென்றார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் காஷ்மீர் பயணத்துக்கு அண்டை நாடான பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மோடியின் காஷ்மீர் பயணம், அங்கு போலி இயல்புநிலையை முன்னிறுத்துவதற்கான மற்றொரு தந்திரம். 2019 ஆகஸ்டு 5-ந்தேதி முதல், காஷ்மீரில் உள்ள உண்மையான அடிப்படை பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப இந்தியா மேற்கொண்ட பல அவநம்பிக்கையான முயற்சிகளை சர்வதேச சமூகம் கண்டுள்ளது. இந்தியா வடிவமைத்துள்ள நாட்டில் நீர்மின் நிலையம் கட்டுமானம் சர்ச்சைக்குரியது. மேலும் குவார் நீர்மின் நிலையத்துக்கு இந்தியா இதுவரை பாகிஸ்தானுடன் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்த விதியை நிறைவேற்றவில்லை.
இந்திய பிரதமரால் இரண்டு நீர்மின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதை, 1960-ம் ஆண்டின் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் நேரடி மீறலாக பாகிஸ்தான் கருதுகிறது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா தனது கடமைகளை நிறைவேற்ற வேண்டும். ஒப்பந்த கட்டமைப்புக்கு தீங்கு விளைவிக்கும் எந்த நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் என்றும் பாகிஸ்தான் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.