டெல்லியை பாதுகாக்க அமித்ஷா தவறிவிட்டார்: சரத்பவார்

மத கலவரத்தில் இருந்து டெல்லியை பாதுகாக்க அமித்ஷா தவறிவிட்டார் என்று சரத்பவார் கூறியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் கோலாப்பூரில் நடந்தது. கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் சரத்பவார் பேசியதாவது:-

கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி மதக்கலவரத்தால் பற்றி எரிந்தது. டெல்லி, முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் கீழ் உள்ளது. ஆனால் அதன் போலீஸ் துறை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் கீழ் உள்ளது. மத கலவரத்தில் இருந்து டெல்லியை பாதுகாக்க அமித்ஷா தவறிவிட்டார். டெல்லியில் ஏதாவது நடந்தால் அது உலகம் முழுவதும் தெரிகிறது. டெல்லியில் பதற்றம் நிலவி வருவதாக உலகம் நினைத்து கொள்ளலாம்.

இதேபோல கர்நாடக மாநிலத்தில் சிறுபான்மையினர்களின் கடை பெயர்கள் பலகையில், அந்த கடைகளில் பொது மக்கள் பொருட்கள் வாங்க வேண்டாம் என எழுதப்பட்டு உள்ளது. பா.ஜனதா ஆட்சியில் உள்ள மாநிலங்களில் இதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. டெல்லி நம் நாட்டின் தலைநகர். அங்கும் சில பகுதிகளில் மோதல்கள் நடந்தன. மக்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். தீ வைப்பு சம்பவங்களும் அரங்கேறின. டெல்லியை ஒற்றுமையாக்கவும், பிளவுபடாமலும் வைக்க அமித்ஷா நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். ஆனால் அவர் அதில் தோல்வி அடைந்துவிட்டார். உங்களிடம் அதிகாரம் உள்ளது. ஆனால் டெல்லி போன்ற நகரை கூட உங்களால் கையாள முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.