துணை வேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதா நிறைவேற்றம்!

பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டமசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது

தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழங்களுக்கு வேந்தராக இருக்கும் ஆளுநர் துணை வேந்தரை தேர்ந்தெடுத்து நியமிக்கிறார். துணை வேந்தரை தேர்ந்தடுப்பதற்கான தேடல் குழுவை மாநில அரசு அமைக்கும். இந்த குழுவிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து ஆளுநருக்கு மாநில அரசு வழங்கும். அவர் மாநில அரசுடன் கலந்தாலோசித்து துணை வேந்தர்களை நியமனம் செய்வார். பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்த நிலையில், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இதனை தாக்கல் செய்தார். மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மசோதாவிற்கு திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

மசோதாவை தாக்கல் செய்து பொன்முடி பேசியதாவது:

தெலங்கானா, குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசு அதிகாரம் பெற்றுள்ளது. கர்நாடக மாநில சட்டத்தின்படி துணைவேந்தர்கள் மாநில அரசின் இசைவுடன்தான் நியமிக்க முடியும். எனவே, அதன் அடிப்படையில், 1923-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழக சட்டம் உட்பட, 13 பல்கலைக்கழகங்களில் சட்டங்கள் திருத்தப்பட உள்ளன. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக் கழகம், பெரியார் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், மற்றும் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகங்கள் உள்ளிட்டவற்றின் சட்டங்கள் திருத்தப்பட உள்ளன.

இனி மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தமிழ்நாடு அரசு நியமிக்கும் வகையில் சட்டத் திருத்தம் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும், பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் நீதித்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசு செயலாளரை ஆட்சிக்குழு உறுப்பினராகவும் நியமிக்க வழிவகை செய்யப்படும். கல்வித்துறையில் ஆளுநர் – அரசுக்கு இடையே உள்ள பிரச்சனைகளை தீர்க்கவே முதலமைச்சர் இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறார்.” என்றார்.

இதையடுத்து, பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டமசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், துணைவேந்தர்களை இனி ஆளுநருக்கு பதில், தமிழக அரசே நியமிக்கும். இதுவரை ஆளுநரின் அதிகாரத்திற்கு கீழ் இருந்த துணை வேந்தர்கள் நியமனம் இனி மாநில அரசின் நேரடி அதிகாரத்திற்கு வரும். தேர்வுக்குழு பரிந்துரைக்கும் 3இல் ஒருவரை துணை வேந்தராக ஆளுநர் நியமித்த நிலையில், இனி தமிழ்நாடு அரசே இறுதி முடிவெடுக்கும். துணை வேந்தர் நியமன முறை மாற்றப்பட்டாலும், இணை வேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சரே இருப்பார். புதிய மசோதாவின்படி, துணை வேந்தர்களை ஆளுநர் தன்னிச்சையாக நீக்க முடியாது.