தன் தாய் வாழ்நாள் முழுதும் கடைப்பிடித்த தன்னலமற்ற கடமையைத் தொடரப் போவதாக, பிரிட்டன் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் கூறினார்.
பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், 96, சமீபத்தில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருடைய மூத்த மகன் சார்லஸ், 73, மன்னராக பொறுப்பேற்று உள்ளார். ராணியின் இறுதிச் சடங்கு, வரும் 19ம் தேதி நடக்க உள்ளது. இதையொட்டி பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக, பார்லிமென்டில் நேற்று உரையாற்றினார் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ். பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அரங்கில் நடந்த இந்தக் கூட்டத்தில், 900 எம்.பி.,க்கள் பங்கேற்றனர். எம்.பி.,க்கள் சார்பில் மறைந்த ராணிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் பேசியதாவது:-
தன் இளம் வயதில் நாட்டின் ராணியாக பொறுப்பேற்றபோது, இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சிறந்த முறையில் பணியாற்ற என்னுடைய தாய் உறுதி ஏற்றார். தன்னலமில்லாமல் தன் கடைமையை நிறைவேற்றுவதை அவர் தன் வாழ்நாள் முழுதும் கடைப்பிடித்தார். என்னுடைய தாயின் வழியில், நம் அரசியல் சாசனத்தின் உயரிய கொள்கைகளை கடைப்பிடிப்பேன். தன்னலமில்லாமல் கடமையை நிறைவேற்றுவதன் சின்னமாக ராணி விளங்குகிறார். அந்த பாரம்பரியத்தை, கடவுளின் அருளோடும், உங்களுடைய ஆலோசனையுடனும் தொடருவேன். நம் நாட்டில் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருப்பதற்கு காரணமாக இந்த பார்லிமென்ட் விளங்குகிறது. நம்முடைய உறவு எப்போதும் போல் சிறப்பாகவே இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து, எடின்பரோவில் நடந்த ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியின் ஊர்வலத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸ், தன் மனைவியுடன் பங்கேற்றார். ஸ்காட்லாந்தில் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, ராணியின் உடலடங்கிய சவப்பெட்டி அங்கு ஒரு நாள் வைக்கப்படுகிறது. இன்று விமானம் மூலம், லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு எடுத்து வரப்பட உள்ளது. ராணியின் மகளான இளவரசி ஆனி உடன் வருகிறார்.