அரசியல் கட்சிகள் ஆறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து போட்டியிடாவிட்டால் அங்கீகாரம் ரத்து!

அரசியல் கட்சிகள் ஆறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து போட்டியிடாவிட்டால் அங்கீகாரம் ரத்து என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கோரி பதிவு செய்யும் அரசியல் கட்சிகள், ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறவேண்டுமென்றால் மாநில சட்டமன்ற தேர்தல்களிலும், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் தனித்தோ, கூட்டணியாகவோ குறிப்பிட்ட சதவீதம் வாக்குகளை பெற வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் உள்ளன. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்வதை பொருட்டு கட்சிகளுக்கு மாநில அளவிலோ, தேசிய அளவிலோ அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் அளிக்கிறது. அதேசமயம் இந்த நிபந்தனைகளை குறிப்பிட கால வரையறைக்குள் பூர்த்தி செய்ய தவறும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தும் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுக்கிறது.

இந்த வகையில், அங்கீகாரம் கோரி பதிவு செய்துள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 111 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக கடந்த ஜூன் மாதம் இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்திருந்தது. தேர்தல் ஆணையத்தில் தெரிவித்துள்ள முகவரியில் கட்சி அலுவலகம் செயல்படாதது உள்ளிட்ட காரணங்களால் 111 கட்சிகளின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் மற்றொரு அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஆணையத்தின் அங்கீகார்ம் கோரி பதிவு செய்துவிட்டு, தொடர்ந்து ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. அதாவது ஆணையத்தில் பதிவு செய்த நாளில் இருந்து தொடர்ந்து ஆறு ஆண்டுகள் ஒரு கட்சி தேர்தலில் போட்டியிடாவிட்டால், பதிவு செய்துள்ள கட்சிகளின் பட்டியலில் இருந்து அக்கட்சி நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் இந்த அறிவிப்பால் நூற்றுக்கணக்கான லெட்டர் பேட் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.