அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து ஓ.பன்னீர் செல்வம் அளித்துள்ள பதில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சாலை அருகே உள்ள பெரியார் உருவச் சிலைக்கு ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார். அவருடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகரன் உட்பட ஏராளமானோர் மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் கூறியதாவது:-
பெரியார் முதல் ஜெயலலிதா வரை அரசியலில் உடன் பயணித்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். அதிமுக ஆட்சியில் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, ஐநா சபைக்கு சென்று இந்தியாவின் ஒற்றுமை பற்றியும், மக்களின் வாழ்வியல் பற்றியும் விளக்கமாக பேசியவர். பண்ருட்டி ராமச்சந்திரன் அரசியல் காரணங்களுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை பலரும் கூறுவர். ஆனால் அவற்றை புறந்தள்ளிவிட்டு, மூத்த நிர்வாகிகளின் தொண்டை, தியாகத்தை எண்ணி செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, ஜெயலலிதாவோடு 21 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியவன் நான். பல பொதுக்கூட்டங்களில் பலமுறை என்னைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அதிமுக ஏழை, எளிய மக்களுக்காகவும், தொண்டர்களுக்காகவும் உருவாக்கப்பட்ட இயக்கம். இரண்டு முறை முதலமைச்சர் பொறுப்பை ஜெயலலிதா வழங்கினாலும் விசுவாசமிக்க தொண்டனாகவே தான் இருந்தேன். அதே நேரத்தில் தலைமையை தொண்டன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது எம்ஜிஆர் வகுத்த விதி. அதன் வழியில் செல்ல வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் போராடி வருகிறோம் என தெரிவித்தார்.
இதேபோல், அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடத்தப்பட்டு வரும் ரெய்டு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, முன்னாள் அதிமுக அமைச்சர்கள் தான் தன்னை குற்றமற்றவர்கள் என நிரூபிக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் லஞ்சம் ஒழிப்புத்துறை தன் கடமையை தான் செய்கிறது என்று தெரிவித்தார்.