மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பிவிட்ட சக மாணவி!

சண்டிகர் பல்கலைக்கழக விடுதியில் மாணவிகள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த சக மாணவி அதை சிம்லாவில் உள்ள தனது ஆண் நண்பருக்கு அனுப்பி உள்ளார்.

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழக விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். இந்த நிலையில் விடுதி மாணவிகள் பல பேரின் குளியல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. மாணவிகள் குளிப்பதை ரகசியமாக கேமரா வைத்து வீடியோ எடுத்திருப்பது தெரியவந்தது. இதனால் மாணவிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பல்கலைக்கழகத்தில் மாணவிகள் நேற்று இரவு போராட்டத்தில் குதித்தனர். ரகசிய வீடியோ எடுத்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்கள் பல்கலைகழக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக இவ்விவகாரத்தை மூடி மறைக்க முயல்வதாக குற்றம்சாட்டினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

மாணவிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். வீடியோக்களை மாணவர்கள் யாராவது எடுத்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் மாணவிகள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்தது சக மாணவி ஒருவர் என்பது பின்னர் தெரியவந்தது. விடுதியில் தங்கி படிக்கும் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு மாணவி ஒருவர், சக மாணவிகள் குளியலறையில் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து அதை சிம்லாவில் உள்ள தனது ஆண் நண்பருக்கு அனுப்பி உள்ளார். சுமார் 60 மாணவிகளின் வீடியோக்களை பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோக்களை அவர் பல மாதங்களாக எடுத்துள்ளார். மேலும் மாணவிகளின் குளியல் வீடியோக்களை பணத்துக்காக விற்று இருக்கிறார். மாணவியிடம் இருந்து வீடியோக்களை வாங்கிய அவரது ஆண் நண்பர் மற்றொரு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவர் வீடியோக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அதன்பின் வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் கசிந்தது. இதற்கிடையே வீடியோ எடுத்த மாணவியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட மாணவிகளில் 8 பேர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. ஆனால், அதை போலீசார் தரப்பில் மறுத்தனர். இதுதொடர்பாக மொகாலி போலீஸ் அதிகாரி விவேக் சோனி கூறும்போது, மாணவிகள் யாரும் தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம். ஒரு மாணவி பதற்றத்தில் மயங்கி விழுந்தார். அவர் ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். ஒரு வீடியோவை தவிர வேறு எந்த வீடியோவும் எங்கள் கவனத்துக்கு இன்னும் வரவில்லை. தடயவியல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

பஞ்சாப் முதல்வர், பகவந்த் மான் டுவிட்டரில் கூறும்போது, “சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் வருத்தமளிக்கிறது. எங்கள் மகள்கள் எங்கள் மரியாதை. இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வதந்திகளை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மாநில கல்வி மந்திரி ஹர்ஜோத்சிங் பெய்ன்ஸ் கூறும்போது, “சண்டிகர் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் அமைதியாக இருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். குற்றவாளிகள் யாரும் தப்பிக்க மாட்டார்கள். இது மிகவும் உணர்ச்சிகரமான விஷயம். நமது சகோதரிகள் மகள்களின் கண்ணியம் தொடர்பானது. எனவே அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது, “சண்டிகர் பல்கலைக்கழத்தில் மாணவிகளின் ஆட்சேபனைக்குரிய வீடியோக்களை ஒரு பெண் பதிவு செய்து இருப்பது மிகவும் வெட்கக்கேடானது. இதில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும். பாதிக்கப்பட்ட உங்களுடன் நாங்கள் இருக்கிறோம். அனைவரும் பொறுமையுடன் செயல்பட வேண்டும்” என்றார்.

இதனிடையே, பல்கலை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆரம்ப கட்ட விசாரணையில், மற்ற மாணவிகளின் தனிப்பட்ட வீடியோ வெளியானதாக கூறப்படும் புகார் தவறானது. கைதான மாணவி, தனது தனிப்பட்ட வீடியோவை மட்டுமே தனது ஆண் நண்பருக்கு அனுப்பி வைத்துள்ளார். புகார் வந்ததுமே நாங்கள் விசாரணை துவக்கி விட்டோம். மொபைல் போன் உள்ளிட்ட சாதனங்கள் போலீஸ் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. சில மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவலும் தவறு எனக்கூறப்பட்டுள்ளது.

தேசிய பெண்கள் கமிஷனும் இந்த விவகாரத்தில் கவனம் கொண்டுள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபி.,க்கு கடிதம் அனுப்பியதுடன், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உதவி செய்யும்படி அறிவுறுத்தி உள்ளது.