பாலஸ்தீன போலீசாருக்கும், போராட்டக்கார்களுக்கும் இடையே மோதல்!

இஸ்ரேலால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நபரை பாலஸ்தீன போலீசார் கைது செய்ததால் வன்முறை வெடித்தது. இதில் ஒருவர் பலியானார்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. அதேவேளை மேற்குகரை பகுதியை பாலஸ்தீன அதிபரான முகமது அப்பாஸ் தலைமையிலான அரசு நிர்வகித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பு போன்று மேலும் பல அமைப்புகள் மேற்குகரை மற்றும் காசா முனையில் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதால் அந்த அமைப்புகளை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.

இதனிடையே, மேற்குகரையின் நப்லஸ் நகரின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனாலும், இந்த பகுதிகளை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசு நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், நப்லஸ் நகரில் நேற்று இரவு பாலஸ்தீன போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது காசாவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் போராளிகள் குழுவை சேர்ந்த 2 பேரை பாலஸ்தீன போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் அல்-குவாசம் பிரிகேட் என்ற ஆயுதமேந்திய அமைப்பை சேர்ந்த முஷப் ஷயத் மற்றும் அமீத் தலிபிஹ் என்பது தெரியவந்தது. இதில், முஷப் ஷயத் இஸ்ரேலால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நபர் ஆவார்.

பாலஸ்தீன போலீசார் 2 பேரை கைது செய்ததை தொடர்ந்து நப்லஸ் பகுதியில் போராட்டம் வெடித்தது. கைது செய்யப்பட்ட 2 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. வன்முறையின் போது 53 வயதான பிரஸ் யாஷ் என்ற நபர் போலீசார் மீது துப்பாக்கிச்சூட்டு நடத்தினார். இதனை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய பிரஸ் யாஷ் மீது போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பிரஸ் யாஷ் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இந்த வன்முறையின் போது மேலும் சிலர் படுகாயமடைந்தனர். மோதலை தொடர்ந்து மேற்குகரையின் நப்லஸ் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.