போரில் தொலைந்தவர்களை சமூக வலைத்தளத்தில் தேடாதீர்கள்: உக்ரைன்

போரில் காணாமல் போனவர்களின் விவரங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம் என உக்ரைன் அரசு தன்நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் 4 மாதங்களைக் கடந்து நடந்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் மின்சாரம் மற்றும் குடிநீா் விநியோகம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உக்ரைன் நகரங்களின் மீது டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வரும் ரஷ்யா போரில் சிக்கியவர்களை பிணைக்கைதிகளாக சிறைபடுத்துவதாக உக்ரைன் அரசு குற்றம் சுமத்தி வந்தது.

இந்நிலையில் ரஷ்யா இடையேயான போரில் காணாமல் போனவர்களை மீட்பதற்காக சமூக வலைத்தளங்களில் அவர்களைப் பற்றிய விவரங்களைப் பதிவிட வேண்டாம் என உக்ரைன் அரசு அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு பதிவிடுவது முக்கிய நபர்களை ரஷ்யா அடையாளம் காண ஏதுவாக அமைந்து விடும் எனவும், அவர்களை மீட்பதற்கு கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டிய சூழல் உருவாகும் எனவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹன்னா மல்யார் ராணுவ வீரர்கள் என தெரியாமல் உக்ரைன் குடிமக்கள் என ரஷ்யா கைது செய்துள்ளவர்களை இத்தகைய சமூக வலைத்தளப் பதிவுகள் காட்டிக் கொடுத்துவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.