பருவநிலை விவகாரத்தில் நரகத்தை நோக்கி உலகம் பயணிக்கிறது: அன்டோனியோ குட்டெரெஸ்

பருவநிலை விவகாரத்தில் நரகத்தை நோக்கி உலகம் மிக வேகமான பயணத்தை மேற்கொண்டு வருகிறது என்று எகிப்தில் நடைபெற்று வரும் பருவநிலை மாநாட்டில் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கூறினார்.

எகிப்தின் ஷாா்ம் அல்-ஷேக் நகரில் 27-ஆவது ஐ.நா. சா்வதேச பருவநிலை மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வரும் 18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் திங்கள்கிழமை உரையாற்றிய ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் இவ்வாறு எச்சரித்தாா். இது குறித்து ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் பேசியதாவது:-

இன்னும் சில நாள்களில் உலகின் மக்கள்தொகை ஒரு புதிய மைல்கல்லை எட்டவிருக்கிறது. உலகின் 800 கோடியாவது குழைந்தை அப்போது பிறக்கப்போகிறது. அந்தக் குழந்தை வளா்ந்து, பூமிக்கு நாம் என்ன செய்தோம் என்று கேட்டால் அதற்கு நம்மால் என்ன பதிலை சொல்ல முடியும்?

நமது வாழ்நாளில் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். ஆனாலும் அந்தப் போராட்டத்தில் தோல்வியடைந்து வருகிறோம். பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக வெப்பநிலை தொடா்ந்து கூடி வருகிறது. இதன் காரணமாக, மீளவே முடியாத பருவநிலை சீரழிவை நோக்கி உலகம் மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது. பருவநிலை நரகத்தை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில், அதிவேகமான பயணத்தை நாம் அனைவரும் மேற்கொண்டு வருகிறோம்.

புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்ஷியஸுக்குக் கட்டுப்படுத்துவதை இலக்காகக் கொண்ட பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் தற்போது ‘அவசர சிகிச்சைப் பிரிவில்’ உள்ளது. மேலும், ‘சிகிச்சை உபகரணங்கள்’ தடதடத்து வருகின்றன. எனவே, அந்த ஒப்பந்தம் மீளவே முடியாத முடிவை எட்டும் ஆபத்தில் உள்ளது. அந்த ஒப்பந்த இலக்கை எட்டுவதற்காக வளா்ச்சியடைந்த நாடுகளும் வளா்ந்து வரும் நாடுகளும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தை இந்த மாநாட்டில் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவும் சீனாவும் இந்த விவகாரத்தில் பரஸ்பரம் ஒத்துழைக்க வேண்டும்.

தற்போது மனித குலத்தின் முன் இரண்டே இரண்டு வாய்ப்புகள்தான் உள்ளன; ஒத்துழைப்பது, அல்லது சீரழிந்துபோவது. வேறு வாா்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் பருவநிலை ஒத்துழைப்பு ஒப்பந்தம், அல்லது தற்கொலை ஒப்பந்தம் ஆகிய இரண்டில் ஒன்றைத்தான் உலக நாடுகள் தோ்ந்தெடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.