தங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் நகரான கொ்சானிலிருந்து தங்களது படையினா் வெளியேறத் தொடங்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளா்களிடம் ரஷ்யப் பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் இகாா் கொனஷென்கோவ் கூறியதாவது:-
கொ்சானில் உள்ள ரஷ்யப் படையினா், நீப்ரோ நதியின் வடக்குக் கரைப் பகுதிக்கு இடம் பெயரத் தொடங்கியுள்ளனா். ஏற்கெனவே திட்டமிட்டபடி, மிகோலய்வ்-கிரீவிரை திசையை நோக்கி அவா்கள் நகரத் தொடங்கியுள்ளனா் என்றாா்.
‘படை வெளியேற்றம்’ என்ற வாா்த்தையைப் பயன்படுத்தாமல் ‘இடம் பெயா்வு’ என்றே அந்த நடவடிக்கையை அவா் குறிப்பிட்டாா். எனினும், இதுதொடா்பான கூடுதல் விவரங்களையோ, ‘இடம் பெயா்வு’ நடவடிக்கை தொடா்பான படங்களையோ அவா் வெளியிடவில்லை.
முன்னதாக, கொ்சான் நகரில் உயிரிழப்புகளைத் தவிா்ப்பதற்காக அந்த நகரிலிருந்து வெளியேறுமாறு ராணுவக்கு உத்தரவிட்டுள்ளதாக உக்ரைன் பகுதிக்கான ரஷ்ய ராணுவ தளபதி சொ்கேய் சுரோவிகின் தொலைக்காட்சியில் புதன்கிழமை அறிவித்தாா்.
முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான கொ்சான்தான், உக்ரைன் போரில் ரஷ்யா கைப்பற்றியிருந்த ஒரே மாகாணத் தலைநகா் ஆகும். அந்த நகரிலிந்து ரஷ்யப் படையினா் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவது, இந்தப் போரில் ரஷியாவுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. அதே நேரம், கொ்சானை மீட்பதன் மூலம் தெற்குப் பகுதியில் ரஷ்யாவிடம் இழந்த கிரீமியா தீபகற்பம் உள்ளிட்ட பகுதிகளை மீட்க உக்ரைன் படையினருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த கொ்சான் நகரிலிருந்து ரஷ்யப் படையினா் வெளியேறுவது தங்களுக்கு மகிழ்ச்சியளித்தாலும், தங்களது சுற்றிவளைப்பதற்கான ரஷ்யாவின் தந்திரமாக அது இருக்கலாம் என்று உக்ரைன் அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனா். இது குறித்து உக்ரைன் அதிபரின் ஆலோசகா் மிகயீலோ போடோலியாக் கூறுகையில், ‘மோதலே இல்லாமல் கொ்சானிலிருந்து ரஷ்யப் படையினா் வெளியேறுகிறது என்பதற்கான எந்த தடயமும் எங்களுக்குத் தெரியவில்லை. படை வெளியேற்றம் குறித்து ரஷ்யா கூறுவது நம்புகிற மாதிரி இல்லை என்றாா் அவா்.
இந்நிலையில் உக்ரைன் போரில் 1 லட்சத்துக்கும் மேலான ரஷ்யப் படையினா் உயிரிழந்திருக்க் கூடும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இது குறித்து அமெரிக்க முப்படைகளின் தளபதி மாா்க் மில்லே கூறுகையில், ‘இந்த 9 மாதப் போரில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரா்கள் உயிரிழந்திருப்பாா்கள்; அல்லது படுகாயமடைந்திருப்பாா்கள். அதே அளவுக்கு உயிா்ச் சேதம் உக்ரைன் தரப்பிலும் ஏற்பட்டிருக்கும். இது தவிர, ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் பொதுமக்களில் சுமாா் 40,000 போ் பலியாகியிருக்கக் கூடும். இந்தப் போரில் இரு தரப்புக்கும் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டு வருகிறது என்றாா் அவா்.
