ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா சென்றடைந்தார். இந்தோனேசியாவின் பாலி நகரில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
இந்தோனேசியாவில் 17-வது ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இருநாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு; சுகாதாரம்; டிஜிட்டல் பரிமாற்றம் என மூன்று அமர்வுகள் நடைபெறும். இம்மாநாட்டின் நிறைவு அமர்வில், இந்தோனேசியாவின் அதிபர் விடோடோ ஜி20 தலைவர் பதவியை பிரதமர் நரேந்திர மோடியிடம் அடையாளபூர்வமாக ஒப்படைப்பார். 2022 டிசம்பர் 1 முதல் ஜி20 தலைவர் பதவியை இந்தியா முறைப்படியாக ஏற்கும். இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இந்தோனேசியா சென்றடைந்தார். இந்தோனேசியாவின் பாலி நகரில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது உற்சாக மிகுதியில் இந்தியர்கள் பாடல் பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முன்னதாக இந்தோனேசியா செல்லும் முன்பாக டெல்லியில் பிரதமர் மோடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், இந்தோனேசியா தலைமையில் நடைபெறும் 17-வது ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நவம்பர் 14-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நான் இந்தோனேஷிய தலைநகர் பாலிக்கு பயணம் மேற்கொள்கிறேன். பாலி உச்சி மாநாட்டின் போது ஜி20 நாடுகளின் தலைவர்களுடன் உலகின் முக்கிய விவகாரங்களான உலகளாவிய வளர்ச்சியை மீட்டெடுத்தல், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம், டிஜிட்டல் மாற்றங்கள் போன்றவை குறித்து விரிவாக பேச்சு நடத்த உள்ளேன். ஜி20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பங்கேற்பு நாடுகளின் தலைவர்களை சந்தித்து இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்தும் அவர்களுடன் பேச்சு நடத்த உள்ளேன். நவம்பர் 15-ந் தேதி பாலியில் இந்திய சமுதாயத்தினர் எனக்கு அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர்களோடு உரையாட ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன் என தெரிவித்திருந்தார்.