பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வா 6 ஆண்டுகளாக பதவியில் உள்ள நிலையில் அவரது குடும்பத்தின் சொத்து மடங்கு பலநூறு கோடி அதிகரித்து ரூ.1,270 கோடியை தொட்ட ஷாக் தகவல் வெளியாகி உள்ள நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருப்பவர் கமர் ஜாவேத் பஜ்வா. இவர் கடந்த 6 ஆண்டுகளாக இந்த பதவியில் நீடித்து வருகிறார். பாகிஸ்தானில் ராணுவ தளபதிகள் பல சந்தர்ப்பங்களில் ஆட்சியை கூட கவிழ்த்து உள்ளனர். இதனால் இந்த பதவி என்பது மிகவும் முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் ராணுவ தளபதியாக கமர் ஜாவேத் பஜ்வா கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவுக்கு வர உள்ளது. முன்னதாக பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சி இந்த ஆண்டு கவிழ்ந்தது. இதில் கமர் ஜாவேத் பஜ்வா தான் முக்கியமானவர் என கூறப்படுகிறது. அதாவது இம்ரான் கானுக்கும், கமர் ஜாவேத் பஜ்வாவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்ட நிலையில் தான் அவரது ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் பாகிஸ்தான் ராணுவ தளபதியாக உள்ள கமர் ஜாவேத் பஜ்வாவின் பதவிக்காலத்தில் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு என்பது பல நூறு கோடி அதிகரித்துள்ள திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பேக்ஸ் போகஸ் எனும் செய்தி நிறுவனம் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் பத்திரிகையாளர் அகமது நூரானி இதுதொடர்பான பல்வேறு விபரங்களை குறிப்பிட்டுள்ளார். அதன்படி ராணுவ தளபதி கமர் ஜாவித் பஜ்வா பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் வாங்கிய பண்ணை வீடுகள், வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள், முதலீடுகள் குறித்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி கமர் ஜாவேத் பஜ்வாவின் சொத்து மதிப்பு என்பது ரூ.12.7 பில்லியன் (இந்திய மதிப்பில் 1,270 கோடி) ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பேக்ஸ் போகஸ் எனும் இணையதளம் இதுதொடர்பான புலனாய்வு செய்து மேலும் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி 2013 முதல் 2021 வரை ஜெனரல் பஜ்வா மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு அறிக்கைகளை பகிர்ந்துள்ளது. அதன்படி கமர் ஜாவேத் பஜ்வாவின் மனைவி ஆயிஷாவின் சொத்து மதிப்பு என்பது 2016ல் பூஜ்ஜியமாக இருந்தது. இது தற்போது ரூ.220 கோடியாக உள்ளது. இதில் ராணுவம் வழங்கிய குடியிருப்பு உள்பட பிற சலுகை அம்சங்கள் இடம்பெறவில்லை. இதேபோல் குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் சொத்து மதிப்பும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இதில் கமர் ஜாவேத் பஜ்வாவின் மருமகள் மஹ்னூர், அவரது தந்தை சபீர் ஹமீதின் ஆகியோரின் சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளது. தற்போது இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்நிலையில் தான் பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தார் இதுபற்றி விசாரணை நடத்த அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில் பாகிஸ்தான் ராணுவ தளபதியின் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வரி விபரங்களும் உள்ளன. இதற்கு தலைமை தாங்கி விசாரிக்க பிரதமரின் சிறப்பு உதவியாளர் தாரிக் மஹ்முத் பாஷாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வரி செலுத்தியதில் தவறு இருப்பினும், முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் கூறினார்.