தி.மு.க. இளைஞரணி பதவியை மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன்: உதயநிதி ஸ்டாலின்!

தி.மு.க. இளைஞரணி பதவியை மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் சென்னை முகாம் அலுவலகத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக தி.மு.க. இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டது குறித்து, உதயநிதி ஸ்டாலினிடம் சென்னையில் நிருபர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்து, உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, ‘தி.மு.க. இளைஞரணி பதவியை மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன்’ என்றார்.

இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், ‘இளைஞரணியை ஏறத்தாழ 40 ஆண்டுகள் வளர்த்தெடுத்து, வலுப்படுத்திய தி.மு.க. தலைவரிடம், செயலாளராக கட்சி பணியாற்ற மீண்டும் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதையொட்டி நன்றி தெரிவித்து, வாழ்த்து பெற்றேன். திறன்மிகுந்த கட்சியின் இளைஞர்களை ஒருங்கிணைப்பதில் பெருமிதம் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் வருகிற டிசம்பர் மாதம் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் துரைமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.