கோகுல்ராஜ் கொலை: பிறழ்சாட்சியான சுவாதியை ஆஜர்படுத்த கோர்ட் அதிரடி உத்தரவு!

ஜாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் வழக்கில் பிறழ் சாட்சியான சுவாதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தை உலுக்கிய ஜாதிவெறிப் படுகொலைகளில் கோகுல்ராஜ் வழக்கும் மிக முக்கியமானது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த தலித் மாணவர் கோகுல் ராஜ். கோகுல் ராஜ், பொறியியல் படிப்பு படித்து கொண்டிருந்தார். அவர் தம்முடன் படித்த சுவாதி என்ற சக மாணவியை காதலித்தார். 2015-ம் ஆண்டு சுவாதியும் கோகுல்ராஜும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சந்தித்து பேசினர். அதன்பின்னர் கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை. நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட சடலமாக கோகுல்ராஜ் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஜாதிவெறியர்களால் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்டது அம்பலமானது. இதனைத் தொடர்ந்து ஜாதிவெறியால் கோகுல்ராஜை படுகொலை செய்ததாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் விசாரணை நடத்திய டிஎஸ்பி விஷ்ணுபிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ், அவரது ஓட்டுநர் அருணன் ஆகியோருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. யுவராஜின் கூட்டாளிகள் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மொத்தம் 10 பேருக்கு இவ்வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் மொத்தம் 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

கோகுல்ராஜ் கொலையாளி யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் தங்களது தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தனர். ஆனால் கோகுல்ராஜ் கொலை வழக்கில் 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்தும் அவர்களுக்கும் தண்டனை வழங்க கோரியும் கோகுல்ராஜின் குடும்பத்தினர் ஒரு வழக்கு தொடர்ந்தனர். இந்த இருதரப்பு மனுக்களும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், கோகுல்ராஜூடன் படித்த சுவாதிதான் இவ்வழக்கின் முக்கியமான சாட்சி. நீதிமன்றத்தில் பிறழ்சாட்சியமாக மாறியவர். அவர் தாம் முன்பு கொடுத்த வாக்குமூலத்தை மறுத்து மற்றொரு வாக்குமூலம் தந்தவர். அவர் பிறழ்சாட்சியாக மாறியதன் காரணத்தை நீதிமன்றம் கண்டறியவில்லை. இவ்வழக்கில் சுவாதியை மீண்டும் விசாரிக்க விரும்புகிறது நீதிமன்றம். ஆகையால் சுவாதியை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமையன்று(இன்று) ஆஜர்படுத்த வேண்டும். அவர் அச்சம் எதுவும் இல்லாமல் நீதிமன்றத்தில் ஆஜராக போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.