ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை: புடின்

ஐரோப்பிய நாடுகளுக்கு செய்யப்பட்டு வந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு ரஷ்ய அதிபர் புடின் தடை விதித்துள்ளார். பிப்ரவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும் இந்த தடை, ஜூலை 1, 2023 வரை அமலில் இருக்கும். ரஷ்யாவின் இந்த முடிவால் ஐரோப்பாவில் எரிப்பொருட்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகள் எண்ணெய்க்காக ரஷ்யாவை பெரிதும் நம்பியுள்ளன. பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்கனவே எரிசக்தி பற்றாக்குறையை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், ரஷ்யாவின் இந்த முடிவு ஐரோப்பிய மக்களை பேரதிர்ச்சி அடயை வைத்துள்ளது. கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைனில் ரஷ்யா போர் தொடங்கியது. இதையடுத்து அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தன. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பயங்கரமாக உயர்ந்தது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டாலும் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியது. அதுவும், குறைந்த விலைக்கு ரஷ்யாவிடம் கச்சா எண்ணைய்யை வாங்கியது இந்தியா. இதற்கு அமெரிக்கா ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

ரஷ்யா உக்ரைன் இருநாடுகளுக்கும் இடையேயான போரில் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் உக்ரைனுக்கு ஆதரவ கரம் நீட்டி வருகின்றன. அத்துடன் ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடையும் விதித்துள்ளன. இதற்கு பதிலடியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செய்யப்பட்டு வந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது. இதனால் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆக வேண்டிய கச்சா எண்ணெய் தேக்கம் அடைவதால்., அதனை இந்தியா பெறுவதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது.