குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் மனித சமூகத்தில் வாழவே தகுதியற்றவர்கள்: வேல்முருகன்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் மனித சமூகத்தில் வாழ்வதற்கே தகுதியற்றவர்கள் என வேல்முருகன் வேதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தனது முகநூல் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சி வேங்கைவயல் கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியூட்டுகிறது. 21 ஆம் நூற்றாண்டிலும் சாதிய வன்மத்துடன் தொடரும் இதுபோன்ற கொடூர செயல்களை ஒருபோதும் ஏற்க முடியாது. இக்கொடூரத்தை அரங்கேற்றியவர்கள் மனித சமூகத்தில் வாழ்வதற்கே தகுதியற்றவர்களாவார்கள் அவர்கள் எவராக இருப்பினும் கண்டறிந்து உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தந்திட காவல்துறையும் தமிழ்நாடு அரசும் முன்வர வேண்டும். அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பிறந்திருக்கும் இந்த 2023 இப்புத்தாண்டிலிருந்து இது போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடைபெறுவதை தடுக்கும் வண்ணம் அமைய வேண்டுமென்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.