பிரதமர் மோடி ‘நம்பிக்கை துரோகி’ என அழைக்கப்படுவார்: சுப்பிரமணிய சாமி

ராமர் பாலம் இருந்தது குறித்து உறுதியாக எதுவும் சொல்ல முடியாது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், பாஜக அரசு இப்பாலத்தை பாரம்பரிய சின்னமாக ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் பிரதமர் மோடி ‘நம்பிக்கை துரோகி’ என அழைக்கப்படுவார் என்று சுப்பிரமணிய சாமி கூறியிருக்கிறார்.

இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கும், இலங்கையின் தலை மன்னார் பகுதிக்கும் இடையே சுமார் 56 கி.மீ தொலைவு வெறும் கடல் பரப்பு மட்டுமே இருக்கிறது. இந்த கடல் பரப்பில் ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு சுண்ணாம்பு பாறைகள் இருக்கின்றன. இந்த பாறைகள் தொடர்ச்சியாக இல்லாமல் கொஞ்ச தூரத்திற்கு தொடர்ச்சியாகவும், கொஞ்ச தூரத்திற்கு இடைவெளி விட்டும் இருக்கிறது. இந்த பாறைகளைதான் பாஜகவினர் ராமர் பாலம் என்று அடையாளப்படுத்துகின்றனர். ஆனால், இதற்கான சான்றுகள் ஏதும் தற்போது வரை கிடைக்கவில்லை. இவ்வாறு இருக்கையில், இது குறித்து முறையாக ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஏனெனில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இந்த சுண்ணாம்பு பாறையை அகற்றி விட்டு அந்த வழியாக கப்பல் போக்குவரத்தை தொடர வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இந்த திட்டத்திற்கு ‘சேது சமுத்திர’ திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த திட்டம் வெற்றிகரமாக முடிந்தால் தூத்துக்குடி, சென்னை, விசாகப்பட்டினம் என வங்க கடல் ஓரத்தில் இருக்கும் துறைமுகங்கள் சிறப்பான வளர்ச்சி பெறும். தற்போது வரை அரபு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் கப்பல்கள் சென்னைக்கு வரவேண்டும் எனில் இலங்கையை சுற்றிக்கொண்டுதான் வருகிறது. ஆனால் ‘சேது சமுத்திர’ திட்டம் நிறைவு பெற்றால் இப்படி இலங்கையை சுற்ற வேண்டிய அவசியமில்லை. பயண நேரமும் சுமார் 30 மணி நேரம் குறையும். எரிபொருளும் மிச்சமாகும். இந்த பாதையை சர்வதேச அளவில் பயன்படுத்தும்போது இந்தியாவின் அந்நிய செலாவனியும் அதிகரிக்கும்.

ஆனால் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்பினர் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தனர். காங்கிரஸ் அரசு ராமருக்கு எதிரான அரசு என்று பாஜகவால் குற்றம்சாட்டப்பட்டது. ராமர் பயணித்த புனித பாதையை இந்த அரசு அழிக்க நினைக்கிறது என்றும் பாஜக விமர்சித்தது. மட்டுமல்லாது இந்த திட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டங்களையும் நடத்தியது. இதனையடுத்து இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அடுத்து வந்த பாஜக அரசு இத்திட்டத்தை முற்றிலுமாக கைவிட்டது. மறுபுறம் இந்த பாலம் குறித்து அறிவியல் பூர்வமான ஆதாரங்களை திட்ட முயன்றது. இதற்காக இஸ்ரோவுடன் சேர்ந்து அதிநவீன புகைப்படங்களை செயற்கைக்கோள் உதவியுடன் எடுத்து ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் ஆய்வு முடிவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை. இவ்வாறு இருக்கையில் கடந்த 22ம் தேதி நாடாளுமன்றத்தில் ஹரியானா எம்பி கார்த்திகேய ஷர்மா “ராமர் பாலம் குறித்த பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வருகிறீர்கள் இந்த ஆய்வின் முடிவு என்ன சொல்கிறது?” என்று கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்திருந்த பதிலில், “ராமர் பாலம் குறித்து இஸ்ரோ உதவியுடன் பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த பாலம் அமைந்திருந்ததாக சொல்லப்பட்ட இடம் துல்லியமாக புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்தபோது ராமேஸ்வரத்திலிருந்து தலை மன்னார் வரை உள்ள இந்த திட்டுக்கள் சுண்ணாம்பு கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. சுமார் 18,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான வரலாறு கொண்டது இந்த ராமர் பாலம் என்பதால் இது குறித்து ஒரு இறுதி முடிவுக்கு எங்களால் வர இயலவில்லை. இராமேஸ்வரத்திற்கும், தலை மன்னாருக்கும் இடையே 56 கி.மீ இருக்கிறது. இவ்வளவு தொலைவில் ஏற்கெனவே கட்டப்பட்டதாக நம்பப்படும் பாலத்தின் சில எச்சங்கள் மட்டுமே தற்போது மீதமிருக்கிறது. மிகச் சரியாக சொல்வதெனில் இங்குள்ள கட்டுமானம் எந்த மாதிரியான கட்டுமானம் என்பது தெரியவில்லை. எனவே இங்கு இருந்தது ராமர் பாலம்தான் என்பதை சரியாக கூறமுடியாது” என்று விளக்கமளித்திருந்தார்.

இதற்கிடையில் பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி, ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தற்போது இந்த வழக்கு விசாரணை மீண்டும் வரும் 13ம் தேதி வர இருக்கிறது. அன்று மத்திய அரசு தனது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இதனை சுட்டிக்காட்டியுள்ள சுப்பிரமணிய சுவாமி, “நீதிமன்றத்தில் அரசு சார்பில் ஆஜராகும் சொலிசிட்டர் ஜெனரல் ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச்சின்னமாக ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கவில்லையெனில் மோடி ‘நாமக் ஹராமி’ என்று அழைக்கப்படுவார்” என்று டுவீட் செய்திருக்கிறார். நாமக் ஹராமி என்றால் நம்பிக்கை துரோகி என்று அர்த்தம் என்பது குறிப்பிடத்தக்கது.