கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள புகழ்பெற்ற கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சோதனை என்கிற பெயரில் மாணவி ஒருவரை மேலாடையை கழற்ற சொல்லி அதிகாரிகள் அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கர்நாடகா தலைநகர் பெங்களூரில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் சென்று வருகின்றன. தினமும் பல ஆயிரம் பயணிகள் விமான நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (சிஐஎஸ்எப்) பணியில் உள்ளனர். விமான நிலையத்துக்கு வரும் பயணிகளை பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கும் பணியை சிஐஎஸ்எப் வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது இளம்பெண் ஒருவர் சிஐஎஸ்எப் பாதுகாப்பு படை மீது பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
கிருஷ்னானி காட்வி எனும் பெயர் கொண்ட இளம்பணெ் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு பதிவு செய்தார். அதில், ‛‛பாதுகாப்பு தொடர்பான சோதனையின்போது பெங்களூர் விமான நிலையத்தில் எனது ஆடைகளை கழற்ற சொன்னார்கள். காமிசோல்(உள்ளாடை) மட்டுமே அணிந்து ஒரு பெண்ணாக விரும்பதகாத வகையில் பாதுகாப்பு சோதனை நடத்தும் இடத்தில் நின்றேன். இது அபாயமானது. ஆடையை கழற்றி சோதனை செய்ய உங்களுக்கு பெண் தான் கிடைத்தாரா?” என பெங்களூர் விமான நிலைய டுவிட்டர் பக்கத்தை டேக் செய்து போஸ்ட் செய்துள்ளார்.
இதனையடுத்து விமான நிலைய நிர்வாகம், அந்த பெண்ணுக்கு பதிலளித்தது. அதில், ‛‛சிரமத்துக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். சம்பவம் தொடர்பாக விமான நிலைய செயல்பாட்டு குழுவுக்கும், சிஐஎஸ்எப் பாதுகாப்பு குழுவுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். உங்களின் தொடர்பு விபரங்களை தாருங்கள்” என கேட்டு இருந்தது. கிருஷ்னானி காட்வி தனது பயணம் தொடர்பான எந்த விபரங்களையும் குறிப்பிடாமல் புகார் அளித்தால் விமான நிலைய நிர்வாகம் இவ்வாறு கோரிக்கை வைத்தது. ஆனால் புகார் சொன்ன அந்த பெண்ணிடம் இருந்து எந்த ரீப்ளேயும் வரவில்லை.
இதற்கிடையே சம்பவம் குறித்து விசாரணை துவங்கியது. இந்த விசாரணையின்பாது விமான நிலைய பாதுகாப்பு பிரிவு உயரதிகாரி இந்த குற்றச்சாட்டை மறுத்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛விமான நிலையத்தின் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. எனவே இந்த புகார் தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கலாம். மேலும் சில சமயங்களில் பாதுகாப்பு தொடர்பான சோதனைகளில் இடையூறாக இருக்கும் ஜாக்கெட்டுகள், செருப்புகள், கோட்டுகள் அகற்ற சொல்வது வழக்கமான ஒன்று தான். இதில் தவறு நடந்தால் அவர் பாதுகாப்பு ஏஜென்சியான சிஐஎஸ்எப் அல்லது விமான நிலைய போலீஸ் நிலையத்தில் ஏன் புகார் அளிக்கவில்லை?. மாறாக அவர் எதற்காக ட்வீட் செய்துள்ளார்?” என கேள்வி எழுப்பினார். மேலும் இது பொய்யான புகாராக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தார்.
இதற்கிடையே தான் இந்த சம்பவத்துக்கு தற்போது சிஐஎஸ்எப் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி, சிஐஎஸ்எப் அதிகாரிகள் கூறுகையில், ‛‛பெங்களூர் விமான நிலையத்தில் ஆடைகளை கழற்றி உள்ளாடையுடன் நிற்க வைத்தாக பெண் பயணி கூறியது தவறானது. பெங்களூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் சிஐஎஸ்எப் மீது பொய் குற்றச்சாட்டை கூறியதற்காக இன்டிகோ 6E விமானத்தில் பெங்களூரில் இருந்து அகமதாபாத்துக்கு சென்ற பெண் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு சோதனைக்காக ஜாக்கெட்டை ஸ்கேனரில் வைக்க கூறப்பட்டது. ஜாக்கெட்டை கழற்றி கொடுக்கும்போது அந்த பயணி மகிழ்ச்சியாக இல்லை. இதனால் ஜாக்கெட்டை கொண்டு வரும்வரை அறையில் இருக்கும்படி சிஐஎஸ்எப் பெண் ஊழியர் கூறினார். ஆனால் அதற்கு மறுத்தவர் அங்கேயே நின்ற நிலையில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்” என தெரிவித்துள்ளனர்.