உபி உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசியினருக்கு இடஒதுக்கீடு: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை!

உத்தரபிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் அல்லது ஓபிசியினருக்கு இடஒதுக்கீடு இல்லாமல் மாநிலத்தில் நகர்ப்புற அமைப்புகளுக்கான தேர்தல்களை ஜனவரிக்குள் நடத்த வேண்டும் என்ற அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் முடக்கியுள்ளது.

அதேபோல் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு, உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்காக ஓபிசிகளின் அரசியல் பின்தங்கிய நிலை குறித்த அறிக்கையை மார்ச் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் கேட்டுக் கொண்டது.

உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார். இடஒதுக்கீடு வழங்குவதற்கு முன் தேர்தல் நடத்தப்படாது, தேவைப்பட்டால், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடுவோம், என்றார். இந்தநிலையில் தற்போது உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்துப் போராடிய மாநில அரசு, ஏற்கனவே தனி ஓபிசி ஆணையம் உருவாக்கப்பட்டுவிட்டதாகவும், மார்ச் மாதத்துக்குள் அதன் பணியை முடிக்கும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. டிசம்பரில், நகர்ப்புற அமைப்புகளுக்கான தேர்தலில் ஓபிசியினருக்கான இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் தடுத்து, இடஒதுக்கீட்டிற்கான வரைவு அறிவிப்பை ரத்து செய்தது. மேலும், தேர்தலுக்கான அறிவிப்பை உடனடியாக வெளியிடவும் தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

17 மாநகராட்சி மேயர்கள், 200 முனிசிபல் கவுன்சில்கள் மற்றும் 545 நகர் பஞ்சாயத்துகளின் தலைவர்களுக்கான இடஒதுக்கீடு இடங்களின் தற்காலிக பட்டியலை வெளியிடும் மாநில அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த மனுவைத் தொடர்ந்து இந்த உத்தரவு வந்துள்ளது.

இடஒதுக்கீடு நிர்ணயம் செய்வதற்கு முன், மாநில அரசு உச்ச நீதிமன்றத்தின் ஃபார்முலாவைப் பின்பற்றி, ஓபிசிகளின் அரசியல் பின்தங்கிய நிலையை ஆய்வு செய்ய ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று மனுதாரர்கள் வாதிட்டது குறிப்பிடதக்கது.