எம்.எல்.ஏ. திருமகன் மரணம்: முதல்-அமைச்சர் நேரில் அஞ்சலி!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மரணம் அடைந்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டுக்கு சென்று திருமகன் ஈவெரா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் திருமகன் ஈவெரா. (வயது 46) திருமகன் ஈவெரா கடந்த சில நாட்களாக உடல் நிலை குன்றி இருந்ததாக தெரிகிறது. சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள குடியரசு இல்லத்துக்கு (ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீடு) வந்தார். நேற்று காலையில் அவர் கட்சி நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்தார். காலை 10 மணிக்கு மேல், திடீரென்று மூச்சு திணறல் ஏற்படுவதாக உடன் இருந்தவர்களிடம் தெரிவித்தார். சிறிது நேரத்தில் நெஞ்சு வலிப்பதாகவும் கூறி உள்ளார். பகல் 11 மணி அளவில் உடன் இருந்தவர்கள் அவரை ஈரோடு கே.எம்.சி.ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்ததை டாக்டர்கள் முறைப்படி அறிவித்தனர். பின்னர் அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

எம்.எல்.ஏ. மரணம் அடைந்த தகவல் பரவிய சிறிது நேரத்திலேயே பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் கச்சேரி வீதியில் உள்ள வீடு முன்பு குவிந்தனர். கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டு இருந்த திருமகன் ஈவெராவின் உடலை பார்த்து உறவினர்கள், நண்பர்கள், கட்சி தொண்டர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. திருமகன் ஈவெரா மரண செய்தி அறிந்ததும், அவரது தந்தையும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சென்னையில் இருந்து உடனடியாக ஈரோடு வந்தார்.

திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு புறப்பட்டார். விமானத்தில் கோவை வந்தடைந்த அவர் காரில் ஈரோட்டுக்கு வந்தார். இரவு 10.05 மணி அளவில் ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள திருமகன் ஈவெரா வீட்டுக்கு வந்தார். அங்கு திருமகன் ஈவெராவின் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திருமகன் ஈவெராவின் தந்தையும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தாய் வரலட்சுமி, தம்பி சஞ்சய் சம்பத் மற்றும் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்கள் சு.முத்துசாமி, கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், மதிவேந்தன், காந்தி, செந்தில் பாலாஜி, தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., விஜய்வசந்த் எம்.பி. ஜோதிமணி எம்.பி., முன்னாள் எம்.பி. கந்தசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் இருந்து காரில் கோவைக்கு புறப்பட்டு சென்றார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.