கொடைக்கானல் வந்தார் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா!

கொடைக்கானல் வருகை தந்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, தனது தந்தை பெயரிலான ஷேக் அப்துல்லா மாளிகையில் ஓய்வெடுத்தார்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் முன்னாள் தலைவருமான பருக் அப்துல்லா இன்று கொடைக்கானல் வருகை தந்தார். கொடைக்கானலில் பரூக் அப்துல்லாவின் தந்தையும் காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஷேக் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தார். 1965ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது ஷேக் அப்துல்லா இந்த மாளிகையில்தான் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் எம்ஜிஆர் ஆட்சியின்போது தமிழகம் வந்த பரூக் அப்துல்லா, எம்.ஜி.ஆருடன் கொடைக்கானல் வந்திருந்தார். அப்போது கோகினூர் என்ற பெயர் கொண்ட இந்த மாளிகை ஷேக் அப்துல்லா மாளிகை என எம்ஜிஆர் பெயர் மாற்றினார்.

இந்நிலையில், அங்கு மீண்டும் நேற்று ஓய்வெடுத்த பரூக் அப்துல்லா பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

43 ஆண்டுகளுக்குப் பிறகு நான் கொடைக்கானலுக்கு வந்தது மகிழ்ச்சியைத் தருகிறது. பழைய நினைவுகள் மகிழ்ச்சியாக உள்ளது. அப்போதைய தமிழக முதல்வரான எம்.ஜி.ராமச்சந்திரனுடன் நானும் அன்னை தெரசாவும் கொடைக்கானலுக்கு வந்தது பசுமை நிறைந்த நினைவுகளாக உள்ளது. இதற்காகத்தான் நான் இங்கு வந்தேன்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போதைய பாஜக அரசு சிறப்பு சட்டத்தை நீக்கிய பின்னரும் தீவிரவாதம் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு ராஜூரி மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது. இன்னமும் தீவிரவாதம் அங்கு முடிவுக்கு வரவில்லை. இந்தியாவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும். ராகுல் காந்தியின் யாத்திரை சிறப்பாக உள்ளது. இது இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ராகுல் காந்தி சிறப்பாக அரசியல் நகர்வுகளை செய்து வருகிறார்.

இந்தியா என்பது பன்முகத்தன்மை, பல்வேறு மொழி, பல்வேறு மதங்களைக் கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடு இந்தியா. இங்கு ஒரே நாடு ஒரே மொழி என்பது சாத்தியமில்லை. ஜி 20 மாநாடு தற்போது உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவை சீர்படுத்த உதவுவதாக இருக்கும். மோடியும், பாஜகவும் சிறப்பாக செயல்படுவதாக கூறுகின்றனர். ஆனால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு கூட, விவாதம் செய்வதற்குக் கூட அவர்கள் அனுமதிப்பதில்லை. ஒன்றுபட்ட இந்தியாவை நாங்கள் விரும்புகின்றோம். பிளவுபட்ட இந்தியா எங்களுக்கு தேவை இல்லை.

தமிழகம் சிறந்த மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், சாலை போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து துறைகளும் சிறப்பாக உள்ளன. ஸ்டாலின் சிறந்த முதல்வராக செயல்படுகின்றார். அவருக்கு என்னுடைய பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறினார்.